தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே, தமிழக அரசு 2026-27 நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் ரூ.34,327 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை விதி எண் 26/1-ன் கீழ் தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி காலை 9:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது. அன்றைய தினம் 2026- 27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து வரும் 20-ம் தேதி பேரவை விதி 193/1-ன் கீழ் 2026- 27 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இதே போல் பேரவை விதி 189 /1-ன் கீழ் 2025- 26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.வரும் 17-ம் தேதி அலுவல் ஆய்வுக் குழு கூடி சட்டப்பேரவை எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்யும். சட்டப்பேரவை நிகழ்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து யார் வேண்டுமானாலும் இணையதளம் மூலம் அதை பார்த்துக் கொள்ள முடியும். அமைச்சரின் பதிலுரைகள், மானிய கோரிக்கைகள், சிறப்பு தீர்மானங்கள் போன்றவை நேரலை செய்யப்படுகிறது. சட்டப்பேரவை விவாதங்களை முழுமையாக நேரலை செய்வது குறித்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும். இவ்வாறு அப்பாவு கூறினார்.

