வடகலை, தென்கலை பிரச்சினையில் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

7 0

வல்லம் ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயிலில் ஏற்பட்ட வடகலை, தென்கலை பிரச்சினையில் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த பத்ரி நாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. கோயில் முழுமையாக வடகலை ஸ்ரீ வைஷ்ணவ சமயம் மற்றும் பாஞ்சராத்ர ஆகமத்தை பின்பற்றும் கோயில். தற்போது வைகானச ஆகமப்படி குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே வல்லம் ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் குடமுழக்கை வைகானச ஆகமத்தை பின்பற்றி நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை மீண்டும் நிறுவவும், உரிய பரிகாரத்தை செய்து பாஞ்சராத்ர ஆகமப்படி குடமுழுக்கை நடத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ண அமர்வு, “இந்து சமய அறநிலையத் துறையில் இந்த கோயில் தென்கலை முறையை பின்பற்றுகிறது என ஆவணங்கள் ஏதும் பராமரிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அறநிலையத் துறை தரப்பில், “கோயிலின் ஸ்தபதியின் அறிவுறுத்தலின் பேரிலேயே நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், “8-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில் மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். அதோடு முறையாக அதிகாரிகளுக்கு மனு அளிக்காமல் நேரடியாக வழக்கு தொடர்ந்து உள்ளார்.

கோயிலில் வடகலை முறைதான் பின்பற்றப்பட்டது என்பதை உறுதி செய்ய போதிய ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. எனவே மனதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.