இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட மட்டத்தில் ஆலோசனை

8 0

இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட மட்டத்தில் ஆலோசனைகளைப் பெறுவதற்கான தொடர் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் வழிகாட்டலின் கீழ்  ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது நிகழ்வு கடந்த மாதம் வியாழக்கிழமை (29) களுத்துறை மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் “இயலாமையுடைய நபர்களுக்கான உணர்திறன் மிக்க பாராளுமன்றம்” என்ற இலட்சியத்திற்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள இயலாமையுடைய நபர்களிடமிருந்து நேரடி கருத்துக்களைப் பெறுவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக அமைந்தது.

அரசாங்க சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் தடைகள் தொடர்பான அனுபவரீதியான மதிப்பாய்வு, முக்கிய சவால்களை அடையாளம் காண்பது மற்றும் இயலாமையுடைய நபர்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், சைகை மொழியைக் கற்றுக்கொள்வதன் முக்கியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த ஹெட்டிஆரச்சி, தனுஷ்க ரங்கநாத், (வைத்தியர்) நிஹால் அபேசிங்க, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

களுத்துறை மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், சுகாதாரத்துறையினர் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த விசேட நிகழ்வில் பங்கெடுத்தனர்.