உளவு பார்த்ததாக பிரான்சில் வெளிநாட்டவர்கள் கைது

8 0

சீனாவுக்காக உளவு பார்த்ததாக, சீனர்கள் இருவர் உட்பட நான்கு பேர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சமீப காலமாக, சீனா உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டுவருவதாக பல்வேறு மேற்கத்திய நாடுகளின் உளவு ஏஜன்சிகள் எச்சரித்துவருகின்றன. சீனா தொடர்ந்து அதை மறுத்துவருகிறது.

இந்நிலையில், ஜனவரி மாதம் 30ஆம் திகதி, தென்மேற்கு பிரான்சிலுள்ள Gironde என்னுமிடத்திலுள்ள வீடு ஒன்றில் வாடகைக்குத் தங்கியிருந்த இரண்டு பேர், சேட்டிலைட்களை இடைமறித்து தகவல்களை சேகரிப்பதாக சந்தேகத்தின் பேரில் பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் அங்கு சென்றபோது, அங்கு தங்கியிருந்த சீன நாட்டவர்கள் இரண்டு பேர் சிக்கியுள்ளார்கள்.

தாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் அவர்கள் ஒரு இரண்டு மீற்றர் அகலமுடைய சேட்டிலைட் டிஷ் ஒன்றை நிறுவியிருந்தார்கள். அதற்கேற்ப, அந்த நேரத்தில் அப்பகுதியில் இண்டர்நெட் சேவை பாதிக்கப்பட்டதாக புகாரும் அளிக்கப்பட்டிருந்தது.

மறுநாள் அதிகாரிகள் அங்கு மேற்கொண்ட சோதனையில், சேட்டிலைட்டுடன் ஒரு கணினி இணைக்கப்பட்டிருந்ததும், அது சேட்டிலைட் தரவுகளை சேகரிக்க பயன்படுத்தப்பட்டிருந்ததும் தெரியவரவே, அந்த இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.

அத்துடன், அங்கிருந்த மேலும் இருவர் அந்த பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் புதன்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அரசு சட்டத்தரணிகள் இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.