மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம், 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்து இதுவரையிலான தனது வரலாற்றில், கடந்த 2025 ஆம் ஆண்டில் அதிகளவிலான பயணிகளைக் கையாண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டில் மொத்தம் 140,614 பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இது ஒரு வருடத்தில் பதிவான மிக அதிகப்படியான பயணிகள் எண்ணிக்கை ஆகும்.
கடந்த ஆண்டில் மட்டும் 703 சர்வதேச விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு வெற்றிகரமாகத் தரை இறங்கியுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாக மத்தள விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய வனவிலங்கு தொடர்பான அச்சுறுத்தல்கள் (முக்கியமாக பறவைகள் மற்றும் யானைகள்) காரணமாக, விமானப் பாதுகாப்பு கருதி பல விமான நிறுவனங்கள் மத்தளத்திற்குச் சேவைகளை வழங்கத் தயக்கம் காட்டி வந்தன.
இருப்பினும், அண்மைய காலமாக இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக, 2025- ஆம் ஆண்டில் விமானங்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

