சாமிமலை மற்றும் கவுரவில தோட்டங்களில் எட்டு தொழிலாளர்களின் சேவையை தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தியதற்கு எதிராக இன்று வியாழக்கிழமை (பெப் 5) காலை 7.30 மணிக்கு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும், சேவை இடைநிறுத்தப்பட்ட காலத்திற்கு சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தொழிலாளர்கள் தெரிவித்ததாவது,
கடந்த 48 நாட்களாக தங்களின் சேவை இடைநிறுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பின்புலமாக தோட்ட நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், தோட்டத்தில் பதிவு செய்யப்படாத வெளிப்புற தொழிலாளர்களை பயன்படுத்தி தேயிலை பறிக்கும் பணியை மேற்கொள்ள நிர்வாகம் எடுத்த தீர்மானத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்காகவே சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்..
தோட்டத்தில் உள்ள ஏனைய பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்ததாவது,
சேவை இடைநிறுத்தப்பட்ட எட்டு பேரில் ஆறு பேரை மீண்டும் பணியில் சேர்ப்பதற்காக தோட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு தொழிலாளர்கள் தொடர்பாக ஒழுக்க விசாரணைகள் தொடர்ந்துவருகிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது.
தோட்ட முகாமையாளரின் கருத்தை பெற முயன்றபோதிலும், அவர் அந்த நேரத்தில் தொழிற்சாலை வளாகத்தை விட்டு வெளியேறியிருந்ததால் கருத்து பெற முடியவில்லை.

