‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் ஆறு முறை கடிதம் எழுதி கூட எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு எங்கும் நீதி கிடைப்பதில்லை’ என உச்ச நீதிமன்றத்திடம் மம்தா பானர்ஜி முறையிட்டார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.எம்.பஞ்சோலி அமர்வு, மனுக்கள் மீதான விசாரணையை மேற்கொண்டது. அப்போது, மனுதாரர்களில் ஒருவரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவன், தலைமை நீதிபதியிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தில், ‘‘இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர் மம்தா பானர்ஜி. நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்தவர் அவர். நீதிமன்றத்துக்கு உரிய மரியாதையுடனும், நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் வழக்கங்களுக்கு இணங்கவும் நடந்து கொள்ள அவர் உறுதி அளித்துள்ளார். எனவே, அவர் தனது தரப்பை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த், மம்தா பானர்ஜி பேச அனுமதி அளித்தார். அப்போது மம்தா பானர்ஜி, தனக்கு ஐந்து நிமிடம் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். 15 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம் என தலைமை நீதிபதி கூறியதை அடுத்து தனது தரப்பு வாதத்தை மம்தா பானர்ஜி முன்வைத்தார்.
அப்போது அவர், ‘‘பிரச்சினை என்னவென்றால், எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை. நான் தேர்தல் ஆணையத்துக்கு ஆறு முறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனாலும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
மொழி பிரச்சினைகளுக்காகவும், எழுத்துப் பிரச்சினைகளுக்காகவும் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இப்படி நடப்பதை மாநில அரசு விரும்பவில்லை.
உதாரணத்துக்கு ஒரு பெண் தனது மாமனார் குடும்பப் பெயரை தனது பெயருடன் சேர்த்துக்கொண்டதற்காக அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப் பின் ஒரு பெண் தனது கணவர் வீட்டுக்கு இடம் மாறியதால் அவரது பெயரை, முரண்பாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், புகழ்பெற்ற வங்க கவிஞர் ஜாய் கோஸ்வாமி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி தீபக் அதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தீவிர சிறப்புத் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆதார் அடையாள அட்டையை ஏற்க மறுப்பதன் மூலம் நீதிமன்றத்தின் உத்தரவை தேர்தல் ஆணையம் மீறுகிறது. மற்ற மாநிலங்களில் இருப்பிடச் சான்று அனுமதிக்கப்படுகிறது, சாதிச் சான்று அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மேற்கு வங்கம் மட்டும் குறிவைக்கப்படுகிறது, நசுக்கப்படுகிறது.
நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அசாமில் தீவிர சிறப்பு திருத்தம் இல்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது ஏன்? இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதைச் செய்ய என்ன அவசரம்?
சிறப்பு தீவிர திருத்தத்தால் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகிறது. தயவு செய்து மக்களின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும்’’ என மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார் .
எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்சினைகள் நியாயமானவை என்பதால் அதை விசாரணைக்கு ஏற்பதாகக் குறிப்பிட்டனர்.
மேலும், நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பாக சிறிதேனும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துங்கள் என தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

