இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும் இந்த அரசாங்கமும் குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்தி இருக்க முடியும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபடுகின்ற தமிழக மீனவர்கள் நடவடிக்கை கண்டிக்கத்தக்க விடையமாக உள்ளது. குறித்த விடயத்தை யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை.
தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் வருகையும், அடாவடித் தனமும், வட பகுதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் கடற்றொழில் அமைச்சர் குறித்த விடையத்தில் மௌனமாக இருக்கின்றார்.கடற்றொழில் அமைச்சரை நாங்கள் பல தடவை சந்தித்து,பல்வேறு முறைப்பாடுகளை தெரிவித்துள்ளோம்.
குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாகவும்,அவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.
நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும்,இந்த அரசாங்கமும்,குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
எதிர் வரும் மே மாதம் தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இடம்பெற இருக்கின்றது.இந்த நிலையில் இவ்வாறான செயல்பாடுகளும் தூண்டி விடப்படுகிறது. முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்தி இருக்க முடியும்.
அண்மையிலே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு பயணம் செய்த நிலையில், இந்திய மீனவர்களின் வருகை அதனால் எமது மீனவர்களின் பிரச்சினை குறித்து தெளிவுபடுத்திய போதும், சாதகமான பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதே அவர்களின் கருத்தாக இருக்கின்றது.அரசியலும்,எமது வாழ்வாதாரமும் பின்னி பிணைந்த விடையத்தை பார்க்கின்றோம்.
குறிப்பாக வட பகுதி மீனவர்கள் தாக்கப்படுகின்ற அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகின்ற போது இங்குள்ள அரசியல் கட்சிகளாக இருக்கட்டும், குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து உள்ளார்கள்.அதை வரவேற்கிறோம்.
இவ்வாறான எதிர்ப்புக்கள் ஊடாகவே அரசாங்கத்தின் சில கொள்கைகளையும்,திட்டங்களையும் மாற்ற முடியும்.அதே போன்று ஏன் இந்த மீனவர்கள் விடையத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல் கட்சிகள் ஏன் ஒருமித்த குரலில் இதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் இல்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கில் இருக்கிறார்கள்.அவர்கள் கூட இந்திய மீனவர்கள் விடையத்தில் மௌனம் காக்கிறார்கள். மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற இரு தினங்களாகி விட்டது.
மீனவர்களின் வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் ஏற்பட இழப்புகளுக்கு இது வரை எவ்வித நிவாரணங்களும் கிடைக்கவில்லை என அந்த மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
கடந்த வருடம் ஏற்கட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக தமக்கு ஏற்பட்ட பாதிப்பகளுக்கும் எவ்வித நிவாரணங்களும் உரிய முறையில் கிடைக்கவில்லை.
நாங்கள் உள்ளூரில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற தொழில் முறைமைகளையும் நிறுத்தி தருமாறு அரசிடம் கோரி இருக்கின்றோம்.
அதே சம காலத்தில் இந்திய மீனவர்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நாங்கள் முன் வைத்தோம்.
ஆனால் உள்ளூரில் தடை செய்யப்பட்ட தொழில்களை நிறுத்தி எங்களை திருப்தி படுத்துகின்ற அரசாங்கம் ஏன் இந்திய மீனவர்களின் வருகையை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை தடுக்க வேண்டும் என்பதே எமது மீனவர்களின் கோரிக்கையாக இருக்கிறது என்றார்.

