தித்வா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலைகள் தொடர்பில் எமக்கும் திட்டங்கள் இருக்கின்றன. என்றாலும் தற்போதுள்ள நிலையில் தற்காலிக தீர்வுகளையே வழங்க முடியுமாக இருக்கிறது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பியினால் வினவப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் கண்டி தெல்தோட்டை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் இரண்டுமாடி கட்டிடம் நிர்மாணிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டதால் குறித்த கட்டிடத்தின் கீழ் மாடி மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டது.
அந்த கட்டிடத்தில் தற்போது 4 வகுப்பறைகள் மாத்திரம் பயன்பாட்டுக்கு எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த மாடியில் 8வகுப்பறைகள் அமைப்பதற்கு பிரேரிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் இந்த பாடசாலையின் எஞ்சிய பகுதிகளை நிர்மாணிப்பதற்காக இந்த வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அத்துடன் தித்வா புயலால் கண்டி மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாடசாலை கட்டிடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் கட்டிட ஆராச்சி நிறுவனம் மற்றும் பொறியியலார் பிரிவினர் இணைந்து பாதிக்கப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அறிக்கைகள் தொடர்பில் பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்போது ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில், தித்வா புயலால் அண்டியா ஆண்டியா கடவத்தை அல் ஹிக்மா முஸ்லிம் வித்தியாலயம் முற்றாக பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது, அங்கிருக்கும் மைதானத்தில் தற்காலிக கட்டிடம் ஒன்றை யுனிசெப் அமைப்பின் உதவியால் அமைத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 3மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் குறைந்த பட்சம் யுனிசெப் நிறுவனத்துக்கு கதைத்து, இந்த கேள்விக்கோரல் செயற்பாட்டை விரைவுபடுத்த கூறவேண்டும்.
அத்துடன் கஹட்ட பிட்டிய மினா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவு பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. இந்த இடத்தில் கட்டிடம் அமைப்பதற்கு நன்கொடையாளர்கள் முன்வந்துள்ளபோதும்.
அதற்கு மாகாணசபை அதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை. மாகாணசபை அதிகாரிகள் விரைவாக அனுமதி வழங்கினால், ரமழான் விடுமுறை காலத்தில் இந்த தற்காலிக கட்டிடங்களை நிர்மாணித்துக்கொள்ள முடியும்.
மாகாண சபை இல்லாமையால் மாகாண கல்வி அமைச்சர் ஒருவர் இல்லை. அதனால் இந்த விடயங்களை அனைத்தையும் தற்போது பாராளுமன்றத்தில் பேசவேண்டி ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பிரதமர் பதிலளிக்கையில், எமக்கு திட்டங்கள் இருக்கின்றன. என்றாலும் தற்போது தற்காலிக தீர்வுகளையே எமக்கு வழங்க முடியுமாக இருக்கிறது. முறையான தகவல்களை வழங்கினால் அது தொடர்பில் தேடிப்பார்க்க முடியும் என்றார்.

