தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. எவ்வளவு அறிவிப்புகளைச் செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள் என தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வழக்கமாக ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் மாநிலங்கள் கொண்டாடக்கூடிய அம்சங்கள் இருக்கும். ஆனால், ஒன்றிய பாஜக அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமே இல்லை.
பாஜகவிற்குச் சித்தாந்த ரீதியில் சிம்மசொப்பனமாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தமிழர்கள் மீது பாஜக கொண்டிருக்கும் வன்மம் ஒருபோதும் தீராது என்பதை மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நிரூபித்துவிட்டது.
தமிழ்நாடு என்கிற பெயரே இல்லாத பட்ஜெட்டை கடந்த காலங்களில் தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு, அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த முறைப் பெயருக்காவது தமிழ்நாடு என்ற வார்த்தையைச் சேர்த்துவிடுவது என்று குறியாக இருந்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதுவும் பெயரளவு அறிவிப்புகள்தான். தமிழ்நாட்டுக்கென பிரத்தியேகமான சிறப்புத் திட்டங்கள் எதையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.
கடந்த காலத்தில் பிஹார் மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு திட்டங்களை அள்ளி வழங்கியது ஒன்றிய பாஜக அரசு. குறிப்பாக ’பிஹார் பட்ஜெட்டா!’ என சொல்லும் அளவிற்கு, வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி, மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி, பெகல்பூர் மின் நிலைய திட்டத்திற்கு ரூ.21 ஆயிரம் கோடி எனச் சுமார் ரூ.70 ஆயிரம் கோடிக்குச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தது மோடி அரசு. ஆனால், இப்போதும் தமிழ்நாட்டை வழக்கம் போலவே புறக்கணித்திருக்கிறார்கள்.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற நமது நீண்ட காலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மோடி குஜராத் முதல்வராக இருக்கும்போது, 50 சதவிகித வரிப் பகிர்வு கேட்டுப் போராடினார். அவர் பிரதமர் ஆன பிறகு அதனைச் செயல்படுத்த மறுக்கிறார்.
விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான சமக்ரா சிக்ஷா நிதி 3,548 கோடி ரூபாய், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி போன்றவற்றை விடுவிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி அறிவிப்பும் இடம்பெறவில்லை. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பல்லாயிரம் கோடி இழப்பை சந்தித்திருக்கும் திருப்பூர் ,கோவை தொழிற்துறையை மீட்பதற்கு ஆக்கபூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை.
தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நாட்டின் பொருளாதாரத்திற்கு 9 விழுக்காடு பங்களிப்பைச் செய்யும் தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு வெறும் 4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதால் ஆண்டுக்குச் சுமார் ரூ. 5,000 கோடி நிதி இழப்பு ஏற்படும்.
பொதிகை மலையில் டிரெக்கிங், பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க மூன்று புதிய கோபுரங்கள் அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒன்றிய அரசின் அறிவிப்பா?
ஆட்சியைத் தாங்கி பிடிக்கும் பிஹாருக்கும் ஆந்திராவுக்கு வாரிக் கொடுப்பார்கள். ஆட்சி அமைக்கக் கூடிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் ஆயிரம் கோடிகளில் திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், தேர்தல் நடக்கும் காலத்தில்கூட அள்ளிக் கொடுக்க மனம் இல்லாமல் டிரெக்கிங், கோபுரம் என வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்.

