தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆறு மாவட்டங்களில் பிப்.5-ம் தேதி வரை மிதமான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை (பிப்.3) வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 4-ம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், 5-ம் தேதி தென் தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதர தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 6 முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் பிப்.6-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கில் தலா 2 செமீ, காக்காச்சி, மாஞ்சோலை, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பிப்.5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

