மலையகத் தமிழ் மக்களின் காணி, வீட்டு உரிமை, முறையான மாதாந்த சம்பளம் மற்றும் குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சம உரிமை இயக்கம் மற்றும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து எதிர்வரும் புதன்கிழமை (04) ஹட்டனில் மாபெரும் மக்கள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
‘மலையகத் தமிழ் மக்களே தளராது போராடுவோம்’ எனும் கருப்பொருளின் கீழ் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஹட்டன் கிருஷ்ணபவன் கலாசார மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் இம்மாநாட்டில், மலையகத் தமிழர் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து கொட்டகலை ஆசிரியர் கலாசாலை உப அதிபர் ஜே. சத்குருநாதன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
அத்துடன், பெருந்தோட்டக் கம்பனிகளின் இலாபம் மற்றும் தொழிலாளர் சுரண்டல் குறித்து பேராதனை பல்கலைக்கழக கலாநிதி கஸ்ப ராஜபக்ஷவும், காணி உரிமை சார்ந்த சட்டக் கோணங்கள் குறித்து சட்டத்தரணி விஜயகுமாரும் விசேட கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.
இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையக மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை உள்ளடக்கிய ‘மாநாட்டுப் பிரகடனம்’ உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
2026ஆம் ஆண்டை மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் ஆண்டாக மாற்றியமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த மக்கள் மாநாட்டிற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பையும், பொதுமக்களின் பங்களிப்பையும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

