வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம் ; விசேட வைத்திய நிபுணர்கள் விலகல் ; நோயாளர்கள் பெரும் பாதிப்பு

7 0

அரச வைத்தியசாலைகள் மற்றும் சுகாதாரத் துறையில் வைத்தியர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி, நேற்று காலை 8.00 மணி முதல் ஒரு சில கடமைகளிலிருந்து விலகியிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.

இருப்பினும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்திய நிபுணர்கள் எவ்விதத்திலும் கலந்துகொள்ளப் போவதில்லை என அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

வானிலை முன்னறிவிப்பு சேவை

நேற்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிகிச்சைக்காக வருகை தந்திருந்த நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததுடன், தமது விசனத்தையும் வெளியிட்டிருந்தனர். வைத்தியர்களின் இந்த நடவடிக்கையினால் ஏழை மக்களே இறுதியில் பாதிக்கப்படுகின்றனர் எனவும், இலவச சுகாதாரத் துறையை நம்பியுள்ள பொதுமக்களை இவ்வாறான நெருக்கடிக்குள் தள்ள வேண்டாம் எனவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு, உபகரணப் பற்றாக்குறை மற்றும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருக்கு 48 மணித்தியால காலக்கெடு விடுத்திருந்தது. அந்தத் தவணை முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் 30ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தின் போது, திங்கட்கிழமை (2) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் சுமார் 23 ஆயிரம் வைத்தியர்கள் அங்கம் வகிக்கின்றனர். இவ்வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது வைத்தியர்களின் முன்மொழிவுகள் புறக்கணிக்கப்பட்டமை மற்றும் ‘இலங்கை வைத்திய சேவை’ என்ற புதிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாமை போன்ற காரணங்களால் பல வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அதற்கமைய, கடந்த 26ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் ஒரு கட்டமாக, மருந்துகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளை வெளியிலிருந்து பெறுவதற்கான பரிந்துரைத் துண்டுகளை வைத்தியர்கள் வழங்கமாட்டார்கள். அத்துடன் அரசியல் தேவைகளுக்காக முன்னெடுக்கப்படும் நடமாடும் மருத்துவ முகாம்களில் பங்கேற்கப் போவதில்லை எனவும், முறையான பாதுகாப்பு உதவியாளர்கள் இன்றி நோயாளிகளைப் பரிசோதிப்பதிலிருந்து விலகியிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும் நோக்குடன், தமக்கு நியமிக்கப்பட்ட வைத்தியசாலைகளைத் தவிர்ந்து, ஏனைய வைத்தியசாலைகளுக்குச் சென்று வழங்கும் மேலதிக பணிகளிலிருந்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட வைத்திய நிபுணர்கள் விலகியுள்ளனர்.

இருப்பினும், இது குறித்துக் கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் அசோக குணரத்ன, தமது சங்க உறுப்பினர்களான அனைத்து விசேட வைத்திய நிபுணர்களும் வழமைப் போல பணிகளுக்குச் சமூகமளிப்பார்கள் என்றும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் தாம் இணையப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.