தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் கைதானவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்தது

14 0

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” என்னும் தேசிய  போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 83,387 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு  என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விநியோகத்தை வலுவிழக்கச் செய்தல், போதைப்பொருளுக்கான கேள்வியை இல்லாமல் செய்தல், நடவடிக்கைகளை விரைவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளித்து, அதன் பயன்பாட்டை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகமைய,  716   சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நாடு முழுவதும் சுமார் 718சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த  பொலிஸார் மேற்படி சந்தேக நபர்களை கைது செய்திருந்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன்,  போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 5 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த  ஒக்டோபர் மாதம் 30 ஆம்  திகதியிலிருந்து  முன்னெடுக்கப்பட்டுவரும்  தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய  அமைய இதுவரை 83,387 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 84100 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 508 கிலோ கிராம் ஹெரோயின் 1401 கிலோ கிராம் ஐஸ், 2357  கிலோ கிராம் கஞ்சா, 174 கிலோ கிராம்  குஷ்,46 கிலோ கிராம் ஹசிஸ்,120  கிலோ கிராம்  மதனமோதகம், 156 மாவா, 11 கிலோ கிராம் கொக்கைன்  மற்றும் 143879 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் 82 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,1710 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது.

மேலும்  போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 1503 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.