கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவை இணைத்து, பிள்ளைகள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
சிறுவர் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், உள ஆரோக்கியம், சைபர் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள நிபுணர்கள், சிவில் சமூகம் மற்றும் இளைஞர்களின் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்தி,இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சமூக ஊடகங்கள் தமது பிள்ளைகள் மீது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதும் இன்று இலங்கையில் பல பெற்றோர்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும். இதற்கான தீர்வாக, பிள்ளைகள் தொழில்நுட்பத்தை அணுகுவதை மறுப்பதாக இருக்கக்கூடாது. சமூக ஊடகங்கள் மூலம் கல்வி, படைப்பாற்றலை வளர்த்தல் மற்றும் தொடர்பாடல் போன்ற பல சிறந்த விடயங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் அதே நேரத்தில்,நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு யதார்த்தமும் உள்ளது. பெரும்பாலும் எமது பிள்ளைகளுக்கு இணைய சூழல் பாதுகாப்பற்றதாகவும், அதற்கு அடிமையாகும் பழக்கத்திற்கும் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அதன் பாதகமான விளைவுகளால், பிள்ளைகளின் தூக்கம், கல்வி, நட்பு மற்றும் உள ஆரோக்கியம் போன்றவை பாதிக்கின்றன.
இதற்கு அடிமையாகும் பழக்கத்தை நிறுத்த முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. மேலும் அதை நிறுத்த முயற்சிக்கும்போது பிடிவாதம்,கோபம் மற்றும் கூச்சலிடுதல் போன்ற நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். இந்த சிக்கல்கள் அவர்களின் கற்றல் மற்றும் மனநிலையைப் பாதிக்கிறது. பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி, தன்னம்பிக்கை இழந்துஇ துன்பப்படுவதை நாம் கண்டிருக்கிறோம்.
இணையவழி மிரட்டல்கள் என்பது மற்றொரு பாரிய அச்சுறுத்தலாகும். மேலும் வயதுக்கு பொறுத்தமற்ற, வன்முறை,பாலியல் அல்லது ஆபத்தான விடயங்கள் (ஊழவெநவெ) போன்றவற்றால் பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது. தீங்கு விளைவிக்கும் விடயங்களை மீண்டும் மீண்டும் தூண்டுவதோடு அதற்கு அடிமையாக்கும் பயன்பாடுகளையும் நாம் பார்த்திருக்கிறோம். அதேபோன்றுஇ பிள்ளைகளுக்கு ஆபத்தான விடயங்களை தூண்டும் சில இணையவழி விளையாட்டுகளும் உள்ளன.
அந்தத் தூண்டல்களின் உச்சக்கட்டமாக சிலநேரம் தற்கொலை செய்யும் மனநிலை கூட உருவாகின்றன. எனவே,பல நாடுகளில், இணையப் பயன்பாடு தொடர்பில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தேசிய முன்னுரிமையாக மாறியுள்ளது. நமது அணுகுமுறையும் 03 கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.
முதலாவதாக, பிள்ளைகளின் பாதுகாப்பு அவசியம். அது நமது அரசாங்கத்தின் அசைக்க முடியாத கொள்கையாகும். இரண்டாவதாக, காரணிகள் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் நாம் செயல்படுவது மிகவும் அவசியம். நாம் ஒருபோதும் கோஷங்களின் பின்னால் செல்வதில்லை. மூன்றாவதாக, உரிமைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு , அதே வேளையில் அதிகப்படியான கண்காணிப்பை அகற்றுவதே எமது குறிக்கோள். உரிமைகள், பாதுகாப்பு மற்றும் புத்தாக்கம் ஆகிய மூன்று அம்சங்களையும் சமநிலைப்படுத்துவதே எமது முதன்மையான குறிக்கோள் ஆகும்.
பல நாடுகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த அனுபவங்களை கவனமாக ஆராய்ந்து, நமக்கு ஏற்றவாறு மாற்றி நமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிப்பது காலத்தின் தேவையாகும். அதன் முதல் படியாக, கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுடன் கலந்தாலோசித்து, சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வை ஆரம்பிக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

