அவலத்தைப் பாத்து ரசித்தவனுக்கு தர்மம் கொடுக்கும் தீர்ப்பு!”அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்”

18 0

வரலாறு சில நேரங்களில் விசித்திரமானது, பல நேரங்களில் கொடூரமானது. நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான. போரில், தர்மம் எங்கே இருக்கிறது என்று பார்ப்பதை விட, தங்கள் சுயநலன் எங்கே இருக்கிறது என்று பார்ப்பதே உலக நாடுகளின் வழக்கம். இதற்கு ஆகச்சிறந்த உதாரணம், முப்பது ஆண்டு கால ஈழப் போராட்டத்தை நசுக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்ட விதம் ஆச்சர்யப்பட வைக்கின்றது.
அமெரிக்காவும் ஈரானும் பரம எதிரிகள்; இந்தியாவும் பாகிஸ்தானும் தீராத பகைவர்கள், சீனாவும் இந்தியாவும் எல்லையில் மோதிக்கொள்பவர்கள். ஆனால், ஒரு நியாயமான தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க வேண்டும் என்று வரும்போது, இந்த “எதிரிகள்” அனைவரும் ஒரு புள்ளியில் கைகோர்த்தனர்.

தர்மம், அதர்மம் என்ற அடிப்படை அறங்களைக் காற்றிலே பறக்கவிட்டு, தமிழினத்தின் வீழ்ச்சிக்காக இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் நின்றனர்.ஈரான் ஒரு இஸ்லாமியக் குடியரசு, அமெரிக்க எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்டது. ஆனால், இலங்கையில் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்க அவர்கள் அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும் மறைமுகமாக ஒரே அணியில் நின்றனர்.

ஈரானின் வழங்கிய உதவிகள் தான் போரின் போக்கை வேறுவிதமாக மாற்றியது..

மேற்கத்திய நாடுகள் மனித உரிமை என்ற போர்வையில் ஆயுதத் தடை விதித்தபோது, இலங்கை அரசிடம் பணம் இருக்கவில்லை. அப்போது ஈரான் குறைந்த வட்டியில் 150 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை வாரி வழங்கியது. அந்தப் பணத்தில்தான் பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் இலங்கை ஆயுதங்களை வாங்கியது.யுத்த டாங்கிகளும், மிக் போர் விமானங்களும் வானில் பறக்க எரிபொருள் தேவைப்பட்டது. இலங்கை பொருளாதார ரீதியாக வீழ்ந்திருந்தபோது, ஈரானின் சலுகை விலை கச்சா எண்ணெய் தான் சிங்கள இராணுவத்தின் இயந்திரங்களை இயக்கியது.

ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் (Revolutionary Guards) இலங்கை இராணுவத்திற்குப் போர்த் தந்திரங்களையும், உளவுத்துறை ஆலோசனைகளையும் வழங்கினர். புலிகளின் நகர்வுகளைக் கண்காணிக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை ஈரான் தாராளமாக வழங்கியது.ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்தபோதெல்லாம், ஈரான் ஒரு கவசமாக நின்று தடுத்தது. “ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையில் யாரும் தலையிடக் கூடாது” என்று கூறி, தமிழர்கள் மீதான இனப்படுகொலையை உலகக் கண்களிலிருந்து மறைக்க ஈரான் உதவியது.

“அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்” என்பார்கள். அன்று தமிழர்களின் நியாயமான போராட்டத்தை ஒழிக்க அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் மறைமுகமாக கைகோர்த்த அதே ஈரான், இன்று அதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் அழிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.அன்று தமிழர்களின் கதறலைச் செவிமடுக்காத நாடுகள், இன்று தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காகப் பதறிக் கொண்டிருக்கின்றன. முப்பது இலட்சம் மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சிதைக்க உதவிய நாடுகள், இன்று வரலாற்றின் அதே பக்கங்களில் தள்ளப்பட்டிருப்பது கர்மாவின் சுழற்சியே அன்றி வேறில்லை.

ஈழப்போர் என்பது வெறும் ஒரு நாட்டுக்குள்ளான போர் அல்ல, அது உலக நாடுகளின் கூட்டுச் சதி. அதில் ஈரானின் பங்கு என்பது மறக்க முடியாத துரோகம். ஒரு இனம் தனது மண்ணுக்காகவும், உரிமைக்காகவும் போராடியபோது, தர்மம் பாராது கைகோர்த்த நாடுகளின் பட்டியல் வரலாற்றில் என்றுமே கைகளில் இரத்தக்கறை படிந்தவர்களாகவே இருப்பார்கள்.