“என்டிஏ பிரச்சார கூட்டத்தை பார்த்து திராவிட மாடல் அரசுக்கு பதற்றம்” – வானதி சீனிவாசன்

8 0

தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து திராவிட மாடல் அரசு பதற்றத்தில் உள்ளது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், வெள்ளிக்கிழமை (ஜன.30) மாலை பழநி சண்முகநதியில் வழிபட்டு விட்டு பாதயாத்திரையாக வந்து, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பக்தர்கள் புனித நீராடும் சண்முகநதி சுகாதார சீர்கேடாக உள்ளது. சண்முகநதியில் இறங்கவே யோசிக்கும் அளவிற்கு திராவிட மாடல் அரசு இந்து பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் 1,000 கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்தியிருப்பதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசி வருகிறார்.

தமிழர்களின் அடையாளம் முருகன், விபூதி, கோயில்கள். ஆனால் திராவிட மாடல் என்று சொல்லி தனது ஆன்மாவை பிரித்து எடுத்துவிட்டு திமுக அரசு தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. ஊழல் மிகுந்த, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத, ஒவ்வொரு நாளும் தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்துகிற திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைத்து, பிரதமர் மோடியின் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு தமிழகத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல பழநி முருகன் அருள்புரிய வேண்டும்.