மியான்மர் பொதுத் தேர்தல்: ராணுவ ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெற்றதாக அறிவிப்பு

8 0

மியான்மரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், ராணுவ ஆதரவு பெற்ற யூனியன் மற்றும் ஒற்றுமை கட்சி (USDP) பெரும்பான்மை வெற்றியை பெற்றிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சியின் தலைவராக மின் ஆங் ஹ்லைங் உள்ளார். 2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே ராணுவ ஆட்சியால் அவை ரத்து செய்யப்பட்டன.

2015 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி மீண்டும் ஆட்சி அமைக்காதவாறு அவரை ராணுவம் கைது செய்தது. ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்தல் நடைபெற்றது.

மியான்மரின் ஒரு பகுதி ஆயுதம் ஏந்திய இனக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, மியான்மரின் 330 நகரங்களில் 263 நகரங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த ஆண்டு, டிசம்பர் 28-ம் தொடங்கிய தேர்தல் தொடங்கியது. இதில், சுமார் 55% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில், ராணுவ ஆதரவு பெற்ற USDP கட்சி 1,018 வேட்பாளர்களுடன் களமிறங்கியது.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், கீழ்சபைக்கான தேர்தலில் மொத்தமுள்ள 263 இடங்களில், 232 இடங்களை USDP கைப்பற்றியுள்ளது. மேல்சபையில் இதுவரை அறிவிக்கப்பட்ட 157 இடங்களில் 109 இடங்களை USDP கைப்பற்றியுள்ளது.

தேர்தல் முடிவுகளை அடுத்து மியான்மர் நாடாளுமன்றம் வரும் மார்ச் மாதம் கூடும் என்றும், அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களால் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும், புதிய அரசாங்கம் ஏப்ரல் மாதம் பதவியேற்கும் என்றும் ராணுவ ஆதரவு பெற்ற எலவன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்த தேர்தல் செயல்முறையை அங்கீகரிக்கப் போவதில்லை என்று 11 உறுப்பு நாடுகளைக் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மனித உரிமை அமைப்புகளும், சில மேற்கத்திய நாடுகளும் இந்த தேர்தலை ஒரு போலியான நாடகம் என கண்டித்துள்ளன.

எனினும், ராணுவ ஆட்சியின் தலைவராக மின் ஆங் ஹ்லைங் தேர்தல் முடிவுகளை வரவேற்றுள்ளார். இந்த தேர்தல், ஸ்திரத்தன்மையை நோக்கிய ஒரு படி என அவர் வர்ணித்துள்ளார். அரசுப் பொறுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.