78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (30) முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட ஒத்திகை நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால், அப்பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. இதன்படி ஜனவரி 30, 31 மற்றும் பெப்ரவரி 2 ஆகிய திகதிகளில் காலை 7.45 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், ஒத்திகை நடைபெறும். பெப்ரவரி 1 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். அத்துடன் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதி அதிகாலை 3.00 மணி முதல் விழா நிறைவடையும் வரை அப்பகுதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தின் கீழ், சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பல முக்கிய வீதிகளுக்கு வாகனங்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சுதந்திர மாவத்தை, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை, பௌத்தாலோக மாவத்தையிலிருந்து பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தை மற்றும் மெயிட்லண்ட் மாவத்தை நோக்கிய வீதிகள், விஜேராம மாவத்தை உள்ளிட்ட பல வீதிகள் இதனுள் அடங்கும்.
மேலும், சுதந்திர தினத்தன்று அதிகாலை முதல் ஹோர்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, கண்ணங்கர மாவத்தை மற்றும் ஆர்.ஜி. சேனநாயக்க மாவத்தை உள்ளிட்ட வீதிகளிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். எவ்வாறாயினும், குறித்த வீதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர் தமது கடமைகளுக்குத் தடையின்றிச் செல்வதற்கான வசதிகள் பொலிஸாரால் செய்து கொடுக்கப்படும்.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு நகருக்குள் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

