காலியில் அம்பலாங்கொடை, சுனாமிவத்த பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (27) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை, சுனாமிவத்த பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் இனந்தெரியாத இருவர், நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கலபொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஆவார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று மீண்டும் நாடு திரும்பியதையடுத்து விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த இளைஞன் கடந்த ஆண்டு கத்திக்குத்து இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதாள உலக கும்பலின் தலைவரான “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகாவான லலா என்பவரின் மனைவிக்கும் இளைஞனுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகாத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறில் இ்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

