பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை – வடக்குமகாண ஆளுநர் வேதநாயகன்

14 0

போரின் இறுதிக் காலத்தில் நான் கிளிநொச்சி மாவட்டச் செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில், இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேன். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதே எமது நோக்கம். பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை. ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த துரை குடும்பத்தினருக்கு அந்தத் தாயுள்ளம் வந்திருக்கின்றது என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த  ரி.ரி.துரை குடும்பத்தினர் மற்றும் செல்வி சரசீஜா ராமன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இ.ஜெயசேகரம் ஏற்பாட்டில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு  புதன்கிழமை (28)  கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இதனை  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

எமது மண்ணையும் மக்களையும் நினைத்து சிங்கப்பூரிலிருந்து உதவும் இவர்களது நல்ல மனதுக்கு இறைவன் இன்னும் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பான். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிடம் நான் அன்பாகக் கேட்பது ஒன்றே ஒன்றுதான்.

உங்களுக்கு உதவி செய்யும் இந்தப் பரோபகாரிகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரேயொரு கைமாறு, இந்த உதவியைச் சரியாகப் பயன்படுத்தி, சமூகத்தில் நீங்கள் முன்னேறி, உங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவது மாத்திரமேயாகும்.

இத்திட்டத்தை ஒருங்கிணைத்துச் செயற்படுத்திய ஜெயசேகரம் நன்றிகள். அவர் எதை ஆரம்பித்தாலும் அதனை முழுமையாக நிறைவேற்றாமல் ஓயமாட்டார்.

கிளிநொச்சியில் மிகச் சிறப்பாகச் செயற்படக்கூடிய ஒரு மாவட்டச் செயலாளர் இருக்கின்றார் என்ற அடிப்படையில், இத்திட்டத்தின் முதல் கட்டத்துக்கு அவர் கிளிநொச்சியைத் தெரிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள், என்றார்.

வடக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 1000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 181 குடும்பங்களுக்கு இன்று உதவிகள் வழங்கப்பட்டன.

இதற்காக ஒரு கோடியே 46 இலட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபா செலவிடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட உதவிகள் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளன.

இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன்,  திட்ட ஏற்பாட்டாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இ.ஜெயசேகரம், மாவட்டச் செயலகப் பதவியினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.