திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணியின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ரகுநாத், திருமலை, விவேக், நாகராஜ், விக்னேஷ், பாண்டியன் உள்ளிட்ட 12 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி டிச.3-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதற்காக எங்கள் மீது திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
நாங்கள் அரசியலமைப்பு விதிகளை பின்பற்றியே போராட்டம் நடத்தினோம். எங்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும். விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கௌரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது, பின்னர் நீதிபதி, வழக்கில் இ-பைலிங் வழியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது இன்னும் கோப்புக்கு எடுக்கப்படவில்லை. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. விசாரணை பிப்.3-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

