சுகாதார ஆய்வாளர் பணிகளுக்கு நியமன ஆணை வழங்க இடைக்கால தடை

11 0

 தமிழகத்தில் 1,429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த கதிர் ஜாய்சன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் 1,429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 7-ல் நடைபெற்றது.

இத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. தேர்வு மையங்களில் வெளிப்படையாகவே செல்போன் பயன்படுத்தவும். காப்பி அடிக்கவும் அனுமதியளிக்கப்பட்டது. இவை தேர்வு மைய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. எனவே, நேர்மையாக நடைபெறாத தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதி பி.புகழேந்தி இன்று விசாரித்தார். மனுதாரர் தரப்பில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது. தேர்வில் நடந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தாமல் பணி நியமனம் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், விசாரணை நிறைவடையாமல் பணி நியமன ஆணையும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தமிழகத்தில் 1,429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணி நியமனங்களை வழங்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தேர்வில் நடைபெற்ற முறைகேடு புகார் குறித்து தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.