ஜேர்மனியில் பணி செய்துவரும் பல்கேரியா நாட்டவர்களான திறன்மிகுப் பணியாளர்கள் பலர் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிவருகிறார்கள்.
காரணம் என்ன?
தான் பல்கேரியாவில் பெறும் வருவாய், ஜேர்மனியில் பெறும் வருவாயைவிட 300 யூரோக்கள் அதிகம் என்கிறார் 2025ஆம் ஆண்டு தனது சொந்த நாடான பல்கேரியாவுக்குத் திரும்பிய கிறிஸ்டினா (Kristina Borisova, 41) என்னும் பெண்.

இங்கே தன்னுடைய பெற்றோர் வீட்டில் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதால், அவருக்கு வாடகையும் மிச்சமாகிறதாம்.
எல்லா செலவுகளும்போக, தனக்கு மாதம் ஒன்றிற்கு 700 யூரோக்கள் மீதம் வருவதாக தெரிவிக்கிறார் கிறிஸ்டினா.
விடயம் என்னவென்றால், 700 யூரோக்கள் என்பது பல்கேரியாவில் பெரிய தொகையாகும். கடந்த ஆண்டு நிலவரப்படி, பல்கேரியாவில் சராசரி மாத வருவாய் வெறும் 1,300 யூரோக்கள்தான்!
ஆக, ஜேர்மனியில் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, அங்கு அலுவலகங்களில் பணி செய்துவந்த பல்கேரியா நாட்டவர்கள் பலர், இப்போது பல்கேரியாவுக்கு திரும்பி, வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்கிறார்கள்.
பணி ஜேர்மனியில், ஆனால், வாழ்வது பல்கேரியாவில். ஆகவே, பல செலவுகள் மிச்சம், இவர்களை பணிக்கமர்த்தியுள்ள ஜேர்மன் நிறுவனங்களுக்கு முதலீடு போன்ற செலவுகள் மிச்சம்.
கிறிஸ்டினா போன்றவர்களுக்கான காப்பீட்டையும் பல்கேரியா பொறுப்பெடுத்துக்கொள்வதால், அந்த செலவும் ஜேர்மனிக்கு மிச்சம்.
ஆக, இருதரப்பினருக்கும் லாபம் கிடைப்பதாலேயே, ஜேர்மனியில் வாழ்ந்துவந்த பல்கேரியா நாட்டவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பி, வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்கிறார்கள், ஜேர்மன் நிறுவனங்களும் அவர்களை வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்ய அனுமதிக்கின்றன.

