தொழில்முயற்சியாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து எம்.பிக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது

16 0

டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தலைமையில் நடைபெற்ற இந்த திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது.

நிதி அணுகலுக்கான பிரதான தடைகளாக உள்ள அதிக வட்டி வீதங்கள் மற்றும் பிணையில்லாமை ஆகியவற்றுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள தீர்வுகள் குறித்து அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். அதிக வட்டி வீதங்களுக்கான தீர்வாக அரசாங்க அல்லது அபிவிருத்திப் பங்காளிகளின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் மறுநிதியளிப்புக் கடன் திட்டங்களை (Re-financing loans) அறிமுகப்படுத்துதல் மற்றும் வட்டி மானியம் (Interests subsidy loans) வழங்கப்படும் கடன் திட்டங்களுக்காக 2026ஆம் ஆண்டிற்காக 95,686 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கமைய, டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக நடவடிக்கைகளை மீண்டும் விரைவாக ஆரம்பிப்பதற்குத் தேவையான தொழிற்படு மூலதனக் கடன்களை (Working capital loans) வழங்கும் பணிகள் கடந்த டிசம்பர் 16 முதல் 3 அரச வங்கிகள் மூலம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

தனியார் வங்கிகள் உட்பட மேலும் 13 வங்கிகள் தற்போது இந்தக் கடன்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் 0 சதவீத வட்டியில் வங்கிகளுக்கு நிதி வழங்கப்படுவதாகவும், வங்கிகள் மூலம் 3 சதவீத வட்டி வீதத்தில் 25 மில்லியன் ரூபா வரை கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அதன்படி 2026ஆம் ஆண்டிற்காக 10,000 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கான கடன் வசதியின் கீழ் 25 மில்லியன் ரூபா வரை 5 சதவீத வட்டி வீதத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கடன்களைப் பெற முடியும் என்றும், 2026ஆம் ஆண்டில் அதற்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும் கடன் பெறும் போது தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பிணைகளைச் சமர்ப்பிப்பதில் உள்ள சிக்கலுக்குத் தீர்வாக நிறுவப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட கடன் உத்தரவாத நிறுவனம் அந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் விதம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தற்போது சம்பந்தப்பட்ட கடன் தொகையில் 67 சதவீதத்திற்குப் பிணைப் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு 80 சதவீதப் பிணைப் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

ஒரு தொழில்முயற்சியாளர் பெறும் கடன் தொகையில் 67 சதவீதத்திற்கு மட்டுமே பிணை கிடைப்பதால், எஞ்சிய 33 சதவீதத்திற்குப் பிணை இல்லாதது நடைமுறை ரீதியாக ஒரு சிக்கலாக இருப்பதால், அது குறித்து அவதானம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.

அதேபோன்று இந்தக் கடன்களைப் பெறும்போதும் பிணைகள் குறித்தும் சரியான முறைமை மற்றும் தகவல்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இன்னும் முறையாகச் சென்றடையவில்லை என்பது ஒரு சிக்கல் என்றும், அதைச் சரியாகத் தெரியப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

விவசாயச் சமூகத்தின் வாழ்வாதார நிலைமையை மேம்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கவும் கடன் வசதிகளை வழங்குவது பெப்ரவரி இரண்டாவது வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதன் கீழ் 50 இலட்சம் ரூபா கடன் தொகை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படவுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டில் அதற்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் மற்றும் வட்டி மானியம் வழங்கப்படும் ஏனைய கடன் திட்டங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், அவை தொடர்பாக உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட சிக்கல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்த திட்டத்தில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதி அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதேபோன்று திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன, அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள ஹெட்டியாராச்சி, தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷ மற்றும் அதிகாரிகள் குழுவொன்றும், பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா உட்பட அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.