மீன்பிடி போர்வையில் போதைப்பொருள் கடத்தல்

7 0

மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும், அவர்களுக்குத் துணை நின்றவர்களுக்கும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. இக்கடத்தலை ஒடுக்கும் பொறுப்பை முப்படைகளும் பொலிஸாரும் முழுமையாக நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளனர். ஆகையால் நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வரும் கடத்தல்காரர்களுக்கு இனி அதற்கு இடமளிக்கப்போவதில்லை எனப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தெரிவித்தார்.
தெற்குக் கடற்பரப்பில் வைத்து பெருமளவான போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகு, ஞாயிற்றுக்கிழமை (25) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதன்போது முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அங்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் நாட்டின் வளர்ச்சிக்காகப் பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. அதன் ஒரு முக்கிய அங்கமாக, ஜனாதிபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் நேரடி மேற்பார்வையில் முப்படைகள், பொலிஸார் மற்றும் அனைத்துப் புலனாய்வு பிரிவுகளும் ஒன்றிணைந்து ‘முழு நாடும் ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தீவிரமான போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் திட்டமிடப்பட்ட  முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகையால் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இனி நாட்டுக்குள் நுழைய எவ்வித வாய்ப்பும் இல்லை. நாட்டில் பேரிடர் நிலைமை நிலவிய போதிலும் முப்படைகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரச நிறுவனங்களும் நாட்டைப் பாதுகாப்பதிலும் கட்டியெழுப்புவதிலும் உறுதியாக உள்ளன. தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்களின் நல்வாழ்வுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தலுக்கு எவ்விதத்திலும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.

மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும், அவர்களுக்குத் துணை நின்றவர்களுக்கும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. இக்கடத்தலை ஒடுக்கும் பொறுப்பை முப்படைகளும் பொலிஸாரும் முழுமையாக நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளனர்.  கடந்த 2025 ஆம் ஆண்டு முப்படைகள், பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் தேசிய , சர்வதேச சட்ட அமலாக்க அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் பல வெற்றிகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் மூலம் பல  போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அதே அர்ப்பணிப்புடன் 2026 ஆம் ஆண்டிலும் பாரிய அளவிலான போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இப்பாரிய போதைப்பொருள் நடவடிக்கைக்கு கடற்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையின் நீண்ட தூர கண்காணிப்புக் கப்பல் பிரிவினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஜனாதிபதி சார்பாகத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.