புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களை இணைக்கும் பாரம்பரியமான எளுவன்குளம் மற்றும் மரிச்சிக்கட்டி இடையே செல்கின்ற புத்தளம்-மன்னார் (B-379) வீதியை மக்களின் பாவனைக்காக உடனடியாக மீளத் திறக்க வலியுறுத்தி ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான ஒரு இலட்சம் கையொப்பங்களை திரட்டும் மாபெரும் கையெழுத்து வேட்டை வெள்ளிக்கிழமை (23) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள புத்தளம் – மன்னார் பழைய வீதியை மீளத் திறக்க வேண்டும் என்ற மக்களின் நியாயமான கோரிக்கையை அரசின் உயர் மட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இக் கையொப்ப போராட்டம் நான்கு மாவட்டங்களில் ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்படுவதாக புத்தளம் – மன்னார் பாதை மீட்புக்கான மக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த பாரிய கையொப்பம் திரட்டல், புத்தளம், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
சர்வமதத் தலங்களில் ஒன்றிணைந்து மக்களால் மேற்கொள்ளப்படும் இந் நிகழ்வு இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், குறித்த வீதியின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இப்பாதை திறக்கப்பட வேண்டும் என்ற மக்களின் ஆவல், முதல் நாளிலேயே, பெரும் திரளான பங்கேற்பாக வெளிப்பட்டதுடன், பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் போக்குவரத்து துயரத்தின் பிரதிபலிப்பாக இந்த ஆதரவு அமைந்ததுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

