பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் காரை மறித்த போலீஸார், அவரை அனுமதிக்கவில்லை. இதனால், பொதுக்கூட்டத்தில் பங்கேற்காமல் பாதியிலேயே திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கூட்டணி கட்சித் தலைவரான இந்திய ஜனநாயக கட்சியின்(ஐஜேகே) நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் வந்தனர். விழா மேடைக்கு சுமார் 800 மீட்டர் தொலைவிலேயே அவர்களது காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தங்களிடம் முறையான நுழைவுச் சீட்டுகள் இருப்பதை சுட்டிக்காட்டியும், காவல்துறையினர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. மதியம் 2.30 முதல் 3.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாரிவேந்தரும், ரவி பச்சமுத்துவும் காரிலேயே காத்திருந்தனர்.
அதிகாரிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. காவல்துறையின் பிடிவாதமான போக்கால் அதிருப்தியடைந்த இருவரும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்காமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். ஆனால், ஐஜேகே பொதுச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
போலீஸாரே காரணம்: இதுகுறித்து ஐஜேகே நிர்வாகிகள் கூறும்போது, “பிரதமர் பங்கேற்கும் கூட்டத்துக்கு உரிய ஆவணங்களுடன் வந்த எங்கள் கட்சித் தலைவர்களை போலீஸார் வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியுள்ளனர். ஒரு மணி நேரம் காத்திருந்தும் அனுமதி கிடைக்காதது வருத்தமளிக்கிறது. இதற்கு காவல்துறையே முழுபொறுப்பு ” என்றனர்.

