நாக விகாரைக்கோ அல்லது வடக்கில் உள்ள ஏனைய விகாரைக்கோ வழிபட செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி குறிப்பிடவில்லை. ஜனாதிபதியின் உரையை எதிர்க்கட்சியினர் திரிபுப்படுத்தியுள்ளார்கள். ஒரு பௌத்தர் கூட வாழாத இடத்தில் விகாரையை கட்டி அந்த விகாரைக்கு பேருந்தில் ஆட்களை அழைத்துச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு தீ வைக்க முயற்சித்த போது கடந்த கால ஆட்சியாளர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது தற்றுணிபுடன் அதற்கு எதிராக பேசினார். அதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற பல்கலைக்கழக திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விவசாயத்துறையில் மாற்றம் ஏற்படுத்த போய் நெருக்கடிக்குள்ளாகி வீட்டுக்குச் சென்றார்.அதேபோல் இந்த அரசாங்கமும் தற்போது கல்வித்துறையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் கல்வி மறுசீரமைப்பு பற்றி சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்பட்டது. ஆகவே கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
ஒருசில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை பேசி நேரத்தை வீணடித்துள்ளார்கள். இந்த அரசாங்கம் இனவாதம் என்று தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகிறோம்.இதற்கு பல விடயங்களை உதாரணமாக குறிப்பிடலாம்.நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் ‘ பல்கலைக்கழக கவுன்சில்’ உள்ளது.
தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘ பல்கலைக்கழக கவுன்சில்’ உறுப்பினர்கள் கடந்த அரசாங்கத்தில் 8 தமிழர்கள், 5 முஸ்லிம்கள், 2 சிங்களவர்கள் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 5 தமிழர்கள், 03 முஸ்லிம்கள், 07 சிங்களவர்கள் என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமரிடம் வினவிய போது நாட்டில் பல்கலைகழகங்கள் இன அடிப்படையில் இல்லை என்றார்.அப்போது நான் ‘ முடிந்தால் களனி, சப்ரகமுவ மற்றும் ருஹூனு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு சிறுபான்மையினத்தவர்களை பெரும்பான்மையாக நியமியுங்கள்’ என்று சவால் விடுத்தேன்.
இந்த முறையற்ற நியமனத்துக்கு எதிராக நேசகுமரன் விமலராஜன் என்பவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.தற்போது தீர்ப்பு கிடைத்துள்ளது.கவுன்சிலின் பதவி காலம் முடி வடைவதற்கு முன்னர் புதிய கவுன்சில் நியமித்ததை தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.
புதிய கல்வி மறுசீரமைப்பில் வரலாற்று பாடத்தில் பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் மற்றும் மலையக மக்களின் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. புதிய கல்வி மறுசீரமைப்பில் பல குறைகள் காணப்படுகிறது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஆதரவளிப்பதா? இல்லையா ? என்பது தொடர்பில் உரிய தீர்மானத்தை எடுப்போம்.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு சென்று குறிப்பிட்ட விடயத்துக்கு அவருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனாதிபதி அங்கு குறிப்பிட்ட விடயத்தை எதிர்க்கட்சியினர் திரிபுப்படுத்தியுள்ளார்கள். தவறான நிலைப்பாட்டை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார்கள். நாக விகாரைக்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய விகாரைக்கோ செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி குறிப்பிடவில்லை.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் வடக்கில் ஒரு விகாரையை பிடித்துக்கொண்டு செய்தவற்றை அனைவரும் அறிவோம்.இதற்கு நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். அந்த குழுவினர் பற்றியே ஜனாதிபதி குறிப்பிட்டார். அதை தவிர்த்து சிங்கள மக்கள் வைராக்கியத்துடன் நாக விகாரையை வழிபட செல்கிறார் என்று ஜனாதிபதி குறிப்பிடவில்லை.
ஜனாதிபதி தற்றுணிபுடன் தான் அவ்வாறு குறிப்பிட்டார். ஒரு பௌத்தர் கூட வாழாத இடத்தில் விகாரையை கட்டி அந்த விகாரைக்கு பேருந்தில் ஆட்களை அழைத்துச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு தீ வைக்க முயற்சித்த போது கடந்த கால ஆட்சியாளர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஜனாதிபதி தற்றுணிபுடன் அதற்கு எதிராக பேசினார்.அதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கதிர்காமத்துக்கு தமிழர்கள் செல்வது பற்றியும் தற்போது குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்டுக்கு பௌத்த மதம் வருவதற்கு முன்னரே கதிர்காம கந்தனை மக்கள் வழிபட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அரசாங்கம் ஒருசில சிறந்த விடயங்களை செய்கிறது, ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு கண்டால் நெருக்கடி நிலை ஏற்படாது என்றார்.

