சட்டமா அதிபருக்கு அரசியல் செல்வாக்கு இல்லாமல் சுயாதீனமாக பணியாற்றுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் அவருக்கு அழுத்தங்கள் பிரயோக்க முடியாது. அதனால் சட்டமா அதிபர் சுயாதீனமான செயற்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். சட்டமா அதிபர் மீது முறையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளி்கிழமை (23) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பிய உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான சட்ட கட்டமைப்பில் குற்றங்களுக்கான நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைக்கு சட்டமா அதிபர் பதவி ஒரு முக்கியமான பதவியாக அமைந்துள்ளது இந்தப் பணியை சட்டத்தின் விதிக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டுமானால், இதன் சுதந்திரமும் சுயாட்சியும் பாதுகாக்கப்பட வேண்டும். சட்ட கட்டமைப்பிற்குள் எப்போதும் விடயங்களை வைத்து கொண்டே நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். சட்டத்தால் வழங்கப்பட்ட அபிமானத்தை அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் பிரகாரமே பயன்படுத்த வேண்டும்.
இதன்பிரகாரம், நான் பின்வரும் கேள்விகளை எழுப்புகிறேன்.
சட்டமா அதிபர் பதவி அரசின் சுயாதீனமானதொரு பதவியாக அமைந்து காணப்படுகின்றதா ? அரசியலமைப்பின் பிரிவு 41(இ) இன் பிரகாரம், அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதியினால் செய்யப்படும் விதப்புரையின் மீது அத்தகைய நியமனம் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டுத்தானா சட்டமா அதிபர் நியமிக்கப்படுகிறார்? இதன் பிரகாரம், சட்டமா அதிபரின் சுதந்திரத்தின் வெளிப்படைத்தன்மை அரசியலமைப்பால் உத்தரவாதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றதா?
சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படும் வகையில், சுயாதீனமாகவும், விசேட நிபுணத்துவ அறிவின் அடிப்படையிலும் சட்டமா அதிபருக்கு கருமம் ஆற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா? அரசியல் செல்வாக்கு இல்லாமல் பணியாற்றுவதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா?
2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கை முறை) சட்டத்தின் பிரிவு 03 இல் கூறப்பட்டுள்ள பிரகாரம், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் மீது முறையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதைத் தடுப்பதற்கு அரசாங்கத்தால் என்ன நடவடிக்கள் எடுக்கப்பட்டுள்ளன?
சட்டமா அதிபரின் கடமைகளை இலக்கு வைத்து, நேரடியாகவும் மறைமுகமாகவும், திட்டமிட்ட அடிப்படையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அலை போல முன்வைக்கப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா? இது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? சட்டமா அதிபர் பதவியின் சுயாதீனம் பாதுகாக்கப்படும் விதமாக, மேலே குறிப்பிட்ட திட்டமிட்ட அடிப்படையிலான தாக்குதல்களைத் தடுப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை?
சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் தொடர்பாக பல்வேறு வலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தவறான பிரசாரங்கள் தொடர்பாகவும் ஆராய வேண்டும் என்றார்.

