“ஆட்சியில் பங்கு… நல்ல முடிவு வரும்!” – மாணிக்கம் தாகூர் நம்பிக்கை

14 0

ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சி தலைமையிடம் இருந்து நல்ல முடிவு வரும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. நம்பிக்கை தெரிவித்தார்.

விருதுநகர் அருகே உள்ள சிவஞானபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு,மத்திய அரசைக் கண்டித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி சார்பில் 6 கட்ட போராட்டம் நடத்த திட்டமிட்டு, கடந்த 9-ம் தேதி முதல்கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். தற்போது 2-ம் கட்டமாக ஊராட்சிகள் தோறும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனைத்து ஊராட்சிகளும் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் வரலாற்று உண்மைகளை விளக்கிச் சொல்லி வருகிறோம். நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக் கூறியும், மெல்ல மெல்ல வெந்நீர் உற்றி இந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்கள் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இதை எதிர்த்து எங்கள் போராட்டம் தொடரும்.

தேர்தல் வந்தால் தமிழகத்துக்கு மோடி வருவார். தமிழகத்துக்கு அவர் தொடர்ந்து துரோகம் இழைவிக்கிறார். 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்றுவரை முடிக்கப்படவில்லை. மதுரைக்கும், கோவைக்கும் வரவேண்டிய மெட்ரோ வரவில்லை. ஓசூர் விமான நிலையம் வரவில்லை. மதுரைக்கான விமான நிலைய விரிவாக்கம் வரவில்லை.

விருதுநகர், சிவகாசி, சாத்தூரில் நிற்க வேண்டிய ரயில்கள் நிற்பதில்லை. கேரளாவுக்கு செல்லும் ரயிலை தமிழகத்தில் இயக்குவதாக இன்று கணக்கு காட்டுகிறார். தமிழர்களை துன்புறுத்துவதுதான் அவரது வேலை.

சிபிஐ, வருமான வரித் துறை கடுமையாக வேலை பார்த்து 13 நாளில் பல கட்சிகளை இன்று மேடைக்கு கூட்டி வந்துவிட்டனர். சிபிஐ, ஐடி முழுநேரப் பணி என்டிஏ கூட்டணியை உருவாக்கும் பணி. ஒரே மேடையில் பல கட்சி தலைவர்களை அமர வைத்ததற்கு காரணம் சிபிஐ, வருமான வரித் துறைதான்.

இண்டியா கூட்டணியில் உள்ள திமுக எம்.பி.க்கள் உள்பட அனைத்து எம்.பி.க்களும் சேர்ந்துதான் இதற்காக எதிர்ப்புத் தெரிவித்தோம். காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. தொடர்ந்து 3 ஆண்டுகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

நூறு நாள் வேலை உறுதிச்சட்டம் நிறுத்தப்பட்டதால் 13 கோடி பேரின் வயிற்றில் மோடி அடித்துவிட்டார். பெரும் பணக்காரர்களுக்கான அரசியல் என்பதை மோடி மீண்டும் நிரூபித்துள்ளார்.

கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து திமுகவும், காங்கிரஸும் குரல் கொடுத்து வருகிறது. வரலாற்றை மாற்றுவதும், புத்தகத்தில் முகலாய மன்னர்களை வில்லனாக காட்டுவதும்தான் பாஜகவின் வேலை.

சிவகங்கை மீட்க ராணி வேலுநாச்சியாருக்கு ஹைதர் அலி உதவிய வரலாற்றை காட்ட மாட்டார்கள். இஸ்லாமியர்களும், இந்துக்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். கொள்கை. பழனிசாமி ஆட்சி வந்தால் இந்த கொள்கை மாறிவிடும். ஆனால். வருவதற்கு வாய்ப்பு இல்லை.

தலைவர்களை மிரட்டி உட்கார வைக்க முடியும். ஆனால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எதிர்க்கட்சி பதவி என்பதுகூட என்டிஏ கூட்டணிக்கு கிடைக்காது” என்றார்.

மேலும், ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு, “தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் வேணுகோபால் மற்றும் தமிழ்நாட்டின் பொறுப்பாளர் ஆகியோர் 39 எம்.பி.க்களையும் தனித்தனியாக அழைத்து கருத்துகளை கேட்டனர். பேச வேண்டிய கருத்துகளை பொதுவெளியில் பேச வேண்டாம். எங்களிடம் கூறுங்கள் என்று கேட்டனர்.

நானும் எனது கருத்தை முழுமையாக தெரிவித்துள்ளேன். காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை ஏற்று நடக்கும் சாதாரண தொண்டன் நான். 39 எம்.பி.க்களும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பதில் கூறியிருப்போம். நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று பதிலளித்தார்.