‘‘உரிய காலத்தில், உரிய இடத்தில், உரியவர்களோடு ஒன்றிணைந்து, உறுதியாகச் செயல்பட்டால் வெற்றி என்பது நிச்சயம். அத்தகைய தருணம் இப்போது நமக்கு கிடைத்துள்ளது’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘இன்று இந்தியாவே மதுராந்தகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்த உடனே, இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. மதுராந்தகமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளமென கூடி இருக்கிறார்கள். நாம் பெறப்போகும் வெற்றிக்கு இதுவே சான்று.
உரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்து செயல்பட்டால், உலகத்தையே கையில் அடக்கலாம் என திருவள்ளுவர் கூறி இருக்கிறார். நம்மை எதிர்ப்பவர்கள் எத்தகைய வஞ்சக நெஞ்சம் கொண்டவர்களாக இருந்தாலும், தீயவர்களாகவும் இருந்தாலும் உரிய காலத்தில், உரிய இடத்தில், உரியவர்களோடு ஒன்றிணைந்து, உறுதியாகச் செயல்பட்டால் வெற்றி என்பது நிச்சயம். அத்தகைய தருணம் இப்போது நமக்கு கிடைத்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து நான்கே முக்கால் ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் திமுக மக்களுக்கு கொடுத்தது வேதனை, துன்பம், எல்லா துறைகளிலும் ஊழல், ஊழல் இல்லாத துறைகளே கிடையது. மக்களை வாட்டி வதைக்கும் அரசு தமிழ்நாட்டுக்குத் தேவையா? மக்களே நீங்களே சொல்லுங்கள். இந்த ஆட்சி தேவையா? இந்த மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
ஒரு குடும்பம் வாழ எட்டு கோடி மக்களைச் சுரண்டுவது நியாயமா? கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது. கருணாநிதி முதல்வராக இருந்தார். அவருக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து செய்த ஒரே சாதனை ஊழல், ஊழல், ஊழல். இன்று ஸ்டாலின் குடும்பம், உலகிலேயே பணக்கார குடும்பமாக இருந்து கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் வர வேண்டும் என்று எண்ணுகிறார்.
திமுகவில் உழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தற்போது வீதியில் இருக்கிறார்கள். ஆனால், கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்குத் தான் கட்சியிலும் அதிகாரத்திலும் இடம் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான், எந்த ஒரு தகுதியும் இல்லாத உதயநிதி ஸ்டாலினை முதலில் சட்டப்பேரவை உறுப்பினராக ஆக்கினார், பின்னர் அமைச்சராக்கினார், தற்போது துணை முதல்வர் ஆக்கி இருக்கிறார். அடுத்தது, எந்த பதவிக்கும் கருணாநிதி குடும்பம் வர முடியாது. இந்த தேர்தல்தான் திமுகவுக்கு இறுதித் தேர்தல். திய சக்தி திமுகவை வீழ்த்துவோம். எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்குவோம்.
நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சக்தியால் பிரதமர் நமக்கு துணை நிற்கின்றார். நமது இயக்கம் வலிமையான இயக்கம், நமது கூட்டணி வெற்றிக் கூட்டணி, வலிமையான கூட்டணி. தேர்தல் என்ற போரில், எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றிக் கொடி நாட்டுவோம். அனைவரும் தேனிக்களைப் போல உழைப்போம்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை குடும்ப ஆட்சிக்கு முடவுகட்டும் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தல், ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். நமது கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். பெரும்பான்மை இடங்களில் வெல்லும். அதிமுக ஆட்சி அமைக்கும்.
தமிழகத்துக்கு எந்த திட்டமும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை என பொய்யான குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறி வருகிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில், மத்திய அரசின் மூலம் பல்வேறு திட்டங்களை நாம் பெற்றோம். நாம் கேட்ட நிதியை கொடுத்தார்கள், நாம் கேட்ட திட்டத்தைக் கொடுத்தார்கள். ரயில்வே மேம்பாலங்கள் அதிக அளவில் கேட்டோம். அதை கொடுத்தது மத்திய அரசு. தேசிய நெடுஞ்சாலைகளை வழங்கினார்கள். சென்னை மாநகரில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு சுமார் ரூ.63,000 கோடி வழங்கி, மத்திய அமைச்சர்களே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார்கள். இவையெல்லாம் மத்திய அரசுதானே கொடுத்தது.
காவிரி நீர் மாசுபடாமல் இருப்பதற்கான நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு நிதி கோரி முதல்வராக இருந்த நான், பிரதமரை நேரில் சந்தித்தேன். சுமார் ரூ.14,000 கோடி மதிப்பிலானது அந்த திட்டம். அந்த திட்ட அறிக்கையை பார்த்ததும், அருமையான திட்டம் என கூறிய பிரதமர் மோடி, அதை குடியரசுத் தலைவர் உரையிலும் இடம்பெறச் செய்தார். அந்த திட்டத்துக்கு கடந்த 2024ல் அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த அரசு முடக்கிவைத்திருக்கிறது. மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், மத்திய அரசு அனுமதி அளித்த திட்டத்தை முடக்குவார்களா? அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு இந்த திட்டத்தை நிறுத்திவைத்திருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் நிறைவேறும்.
அதேபோல், 11 அரசு மருத்துவக் கல்லூரியை கொடுத்தது மத்திய அரசு. வேறு எந்த மாநிலத்துக்கும் இந்த அளவு மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்பட்டதில்லை. அவற்றைக் கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இதுபோல பல திட்டங்களை மத்திய அரசு கொடுத்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில், கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்தது, கேட்ட திட்டத்தைக் கொடுத்தது. இதனால், தமிழகம் வளர்ச்சி பெற்றது. ஆனால், தற்போதைய திமுக அரசு வேண்டுமென்றே மத்திய அரசை குறைகூறி வருகிறது.
எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றிக் காட்டும் உறுதி படைத்தவர் பிரதமர் மோடி. இன்று உலகமே அவரை பாராட்டுகிறது. கரோனா காலத்தில் வல்லரசு நாடுகளால்கூட மக்களை காப்பாற்ற முடியவில்லை. ஆனால், அப்போது பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகளால் லட்சக்கணக்கான மக்கள் உயிர் பிழைத்தார்கள். இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளுக்கும் தடுப்பூசியை வழங்கி விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்பாற்றிய மனித நேயம் மிக்க தலைவர் நரேந்திர மோடி.

