“நாங்கள் தனித்து விடப்படவில்லை” – கூட்டணி குறித்து கிருஷ்ணசாமி விவரிப்பு

25 0

“ஒரு வார காலத்துக்குள் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிப்போம். இதுவரை எங்களை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்பதை பற்றி கவலையில்லை” என கோவையில் மருத்துவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் க.கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “வரும் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக ஒரு சில கருத்துகளை தெளிவுபடுத்தவே உங்களை சந்தித்துள்ளேன். மதுரை மாநாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளோம்.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களை காட்டிலும், வழக்கத்துக்கு மாறாக தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தேர்தல் பரபரப்பு தொற்றி உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி இருக்கின்றனர். ஊடகங்களில் புதிய தமிழகம் கட்சி நிலைப்பாடு குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வருகின்றன. பிரதமர் மோடி பங்கேற்கும் மதுராந்தகம் மாநாட்டில் கிருஷ்ணசாமி பங்கேற்பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். இதற்கானதொரு விளக்கத்தை தற்போது அளிக்கிறேன்.

கூட்டணி குறித்து புதிய தமிழகம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், ஒரு வார காலத்துக்குள் நிலைப்பாட்டை அறிவிப்போம். யாருடன் கூட்டணி என்பது குறித்து கலந்து பேசி வருகின்றோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கொள்கை ரீதியான ஆட்சி அமைக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறோம். மதுவிலக்கு, ஊழல், கனிமள கொள்ளை, அரசு வேலைக்கு விலை என தமிழ்நாட்டின் நிலைமை மாறி உள்ளது.

எங்கள் கொள்கைகளுக்கு ஒத்துப்போகிறவர்களுடன், பூரண மதுவிலக்கு உள்ளிட்டவற்றை குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கொண்டுவரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க சிந்தித்து வருகிறோம். கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் கூட்டணிக்கு என சில வழிமுறைகள் வைத்திருத்தனர். ஆனால், இப்போது அதுபோன்று இல்லை. புதிய தமிழகத்தை அதிகாரப்பூர்வமாக எந்த கட்சிகளும் அணுகவில்லை.

புதிய தமிழகத்தின் மதுரை மாநாட்டின் 13-வது தீர்மானமான குறைந்தபட்ச திட்ட அம்சங்களோடு அமைச்சரவையில் பங்களிக்கும் கூட்டணி ஆட்சி மலர்ந்திட அனைத்து தமிழ் மக்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற நிலைபாட்டில் இருந்து நாங்கள் விலகவில்லை. தமிழ்நாட்டில் புதிய தமிழகம் இன்றி, வெற்றி பெற முடியாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் வலுவாக உள்ளோம்.