கல்வி மறுசீரமைப்பின் போது முன்பள்ளிகளையும் அதன் ஆசிரியர்களை பொறுப்பேற்று பிள்ளைகளுக்கு தரமான அடிப்படை கல்வி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது ஶ்ரீநேசன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
கல்வி மறுசீரமைப்பு என்பது நாட்டுக்கு தேவையானது என்றாலும் இது ஆய்வுகள் செய்யப்படாமல் அவசரமாக செய்யப்படும் போது தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வரலாற்றில் இவ்வாறு தவறுகள் இடம்பெற்றுள்ளன. உதாரணத்திற்கு 1956 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 1971இல் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் என்ற விடயமும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதேபோன்று 1972இல் கொண்டுவரப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பிலும் கல்வி ரீதியில் தமிழ் – சிங்கள மாணவர்களுக்கு இடையே பாரபட்சமான நிலைமை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் 1981இல் யாழ். நூலகம் எரிக்கப்பட்டமையும் கல்விக்கு விழுந்த அடியாகவே பார்க்கின்றோம். இவ்வாறு வரலாற்றை நோக்கும் போது கல்வி பல பக்கச்சார்பான நடைமுறையை பின்பற்றி வந்துள்ளது என்பது தெரிகின்றது.
எனவே கல்வியில் மறுசீரமைப்பை செய்யும் போது சிங்கள மொழியில் கற்பவர்களுக்கும் தமிழ் மொழியில் கற்பவர்களுக்கும் சம வாய்ப்பை வழங்கும் வகையில் அது அமைந்தால் வரவேற்கத்தக்கது.
உண்மையில் மதம் சம்பந்தமான அடிப்படைவாத சிந்தனை இந்த நாட்டை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்து மதம் தொடர்பான ஆலோசனைகளை பெறுகின்ற போது, அரசியல் சார்ந்தவர்களின் ஆலோசகர்களாக இருந்தவர்கள் அதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைவிடுத்து பல்கலைக்கழகங்களின் சைவ சித்தாந்த சபை, சைவ பரிபாலன சபை, இந்து மாமன்றம் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கக்கூடிய சபைகள் உள்ளன. இவை இதில் உள்ளடக்காமல் இருப்பது குறைபாடாகும்.
கல்வி மறுசீரமைப்பு என்பது நாட்டுக்கு தேவையானதே. இதன் மூலம் நாட்டில் அபிவிருத்தி, தேசிய ஐக்கியம் உருவாக வேண்டும். சகலருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகின்றோம்.

