மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு இரு சக்கர வாகனங்களில் செல்ல தடை

29 0

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த நிலையில், மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலைக்கு இரு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகா் மாவட்டம் அன்னூா் தாலுகாவில் மாதேஸ்வரன் மலையில் பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயில், மேட்டூர் வழியாக தமிழக எல்லையில் உள்ள பாலாற்றில் இருந்து 18 கிமீ தூரத்தில் உள்ளது.

அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி போன்ற பண்டிகை தினங்களில் சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேட்டூரில் இருந்து சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை, புலி, யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் பயணிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாதேஸ்வரன் மலைக் கோயிலுக்கு மலைப்பாதையில் தாளபெட்டா பகுதியில் நடந்து சென்ற போது, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை சிறுத்தை கடித்துக் கொன்றது. இது குறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட போலீஸார் மற்றும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, மாதேஸ்வரன் மலையில் உள்ள கோயிலுக்கு சாம்ராஜ்நகா் மாவட்டம் அன்னூா் தாலுகா வழியாகவும், தமிழக எல்லையான மேட்டூரிலிருந்து பாலாறு வழியாகவும் இரு சக்கர வாகனம் மற்றும் நடந்து செல்ல தடை விதித்து சாம்ராஜ்நகா் மாவட்ட போலீஸார் மற்றும் வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

மேட்டூரில் இருந்து மலைக்கோயிலுக்கு பேருந்து, கார் மூலம் செல்ல வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர். மேட்டூரில் இருந்து இரு சக்கர வாகனம்மூலமும், நடந்து செல்லும் பக்தர்களையும் கர்நாடக மாநில எல்லையான பாலாறு வனத்துறை சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தடுத்து திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.