இரண்டு நபர்கள் தன்னை கொடூரமாக தாக்கி காயப்படுத்தியதாக பொலிஸில் போலி முறைப்பாடு அளித்த நபரை கைதுசெய்யுமாறு ஹொரணை பிரதான நீதவான் சந்தன கலன்சூரிய, ஹொரணை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொக்குனுவிட்ட பிரதேசத்தில் உள் வங்கியில் பணத்தை எடுத்துவிட்டு வீடு நோக்கி செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் இருவர் தன்னை பொக்குனுவிட்ட – வெலிகம்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஆழ்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி காயப்படுத்தியதாக நபரொருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, முறைப்பாட்டாளர் தான் வழங்கியது போலி முறைப்பாடு எனவும் அவர் விருப்பத்துடன் சந்தேக நபர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலி முறைப்பாடு அளித்த குற்றத்திற்காக முறைப்பாட்டாளரை கைதுசெய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

