முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் சிறுமி மரணம் – விசாரணை

14 0

முல்லைத்தீவு, மாஞ்சோலை வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவை அலுவலகத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27 \ 2இன் கீழ் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதனால் ஜனவரி 9 ஆம் திகதி சுகாதார அமைச்சரிடம் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

முல்லைத்தீவு, சிலாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்ற 12 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அந்த சிறுமி மாஞ்சோலை வைத்தியசாலையில் 2025 டிசம்பர் 21ஆம் திகதியன்று இரவு 7.20 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்போது வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர் அந்த சிறுமியை சிறுவர் வாட்டுக்கு மாற்றாமல் அவசர சிகிச்சைப் பிரிவுக்கே மாற்றியுள்ளார். 5 நிமிடங்களில் அவரை அங்கு அனுமதித்துள்ளார்.

இந்த வைத்தியசாலை மாவட்ட பொது வைத்தியசாலை பிரிவுக்குள் உட்பட்டது. அதன் பணிப்பாளர் அன்றைய தினத்தில் விடுமுறையில் இருந்தார். குறித்த சிறுமி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றிய பின்னர் சிறுவர் பிரிவில் இருந்த சிறுவர் வைத்தியர் ஒருவர் அந்த சிறுமியை பரிசோதித்துள்ளார். அதன்போது சிறுமிக்கு உணவு ஒவ்வாமை அறிகுறிகள் இருந்துள்ளது. பரிசோதனைகளுக்கமைய சிறுவர் பிரிவு வைத்தியர் பரிந்துரைத்த சிகிச்சை சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சட்டதிட்டங்களுக்கமைய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மரணம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவை அலுவலகம் ஊடாக விசாரணைகள் இடம்பெறுவதுடன், இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் இறுதி அறிக்கை கிடைத்த பின்னர் விளக்கமான அறிக்கை முன்வைக்கப்படும்.

இதேவேளை மாகாண சுகாதார சேவை அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமியின் மரணம் தொடர்பில் மரண பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி அந்த பரிசோதனையின் மாதிரி அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பின்னர் மேலும் விடயங்களை முன்வைக்க முடியும் என்றார்.