குருணாகலில் கிரிபாவ பகுதியில் கைவிடப்பட்ட விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானை ஒன்று கிரிபாவ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
பேக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் குறித்த காட்டு யானையை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிணறுகளைப் பயன்படுத்தாத போது அவற்றை முறையாக மூடிவிட வேண்டும். இதன் மூலம் காட்டு விலங்குகள் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதைக் தவிர்க்க முடியும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் விவசாயக் கிணறுகளில் விழுந்த பல யானைகள் வனவிலங்கு அதிகாரிகளால் பெரும் முயற்சியுடன் மீட்கப்பட்டுள்ளன.
இருப்பினும், சுமார் 8 யானைகள் இவ்வாறான கிணறுகளில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

