உதயநிதியின் ‘சனாதன பேச்சு’ 80% இந்துக்களுக்கு எதிரானது: உயர் நீதிமன்ற நீதிபதி கூறியது என்ன?

32 0

 “தமிழக துணை முதல்வர் உதயநிதியின் சனாதனம் குறித்த வெறுப்புப் பேச்சு என்பது இந்தியாவில் வாழும் 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது. பெரியார் தவிர மகாத்மா காந்தி, காமராஜர், புத்தர், ராமானுஜர், வள்ளலார் போன்றவர்கள் சனாதானத்துக்கு எதிரானவர்கள் அல்ல” என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது.

தமிழக துணை முதல்வர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக டெல்லியை சேர்ந்த பாஜக ஐடி பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா மீது திருச்சி சிசிபி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அமித் மாளவியா மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு ‘ஒழிப்பு’ என்ற வார்த்தையை அடிப்படையாகக் கொண்டது. ‘ஒழிப்பு’ என்ற வார்த்தையை ‘இல்லாமல் ஆக்குதல்’ என மொழிபெயர்க்கலாம். இது ‘ஏற்கெனவே இருக்கும் ஒன்று இருக்கக் கூடாது’ என்பதைக் குறிக்கிறது. இதை இந்த வழக்குக்குப் பயன்படுத்தினால், சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது. இதன் பொருள், அழிப்பவரின் கருத்துக்கு இணங்காத செயல்பாடுகளை ஒடுக்குவதாகும்.

அப்படிப் பார்த்தால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு மக்கள் குழுவே இருக்கக் கூடாது என்றால், அதற்குப் பொருத்தமான சொல் ‘இனப்படுகொலை’ ஆகும். சனாதன தர்மம் ஒரு மதம் என்றால், அது ‘மதப் படுகொலை’ ஆகும். பல்வேறு தாக்குதல்கள் மூலமாகவும், எந்தவொரு முறையையும் அல்லது பல முறைகளையும் பின்பற்றி மக்களை வேரறுப்பதையும் குறிக்கிறது. எனவே, ‘சனாதன ஒழிப்பு’ என்ற தமிழ்ச் சொற்றொடர் தெளிவாக இனப்படுகொலை அல்லது கலாச்சாரப் படுகொலையை குறிக்கும்.

இத்தகைய சூழ்நிலையில், அமைச்சரின் பேச்சைக் கேள்விக்குள்ளாக்கி மனுதாரர் சமூக வலைதளத்தில் பதிவிட்டது வெறுப்பு பேச்சாகாது. மனுதாரரின் செயல், அமைச்சரின் வெறுப்புப் பேச்சுக்கு ஓர் எதிர்வினை மட்டுமே. இதனால் வழக்கை ரத்து செய்ய கோருவதற்கு மனுதாரருக்கு முழு உரிமை உள்ளது.

தமிழகத்தில் ​இந்து மதத்தினர் மற்றும் சாதி இந்துக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. உதாரணமாக ​​குடுமியை வெட்டுவது, பூணூலைக் கழற்றுவது, பன்றிகளுக்குப் பூணூல் அணிவிப்பது போன்ற இந்து மதத்துக்கும், சாதி இந்துக்களுக்கும் எதிரான குறிப்பிட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பதை நிரூபிக்க ஆவணங்கள் உள்ளன.

இந்து கடவுள்களான ராமர், விநாயகருக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்துள்ளார். பல விநாயகர் சிலைகளை உடைத்துள்ளார். இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால், ஒரு சில புகார் தவிர்த்து பெரும்பாலான புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக பெரியாருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, எதிர்காலத்தில் புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

கடந்த 100 ஆண்டுகளாக, திராவிடர் கழகத்தாலும், அதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் இந்து மதத்தின் மீது ஒரு தெளிவான தாக்குதல் நடத்தப்படுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ​அமைச்சரின் பேச்சு 80 சதவீத இந்துக்களுக்கு முற்றிலும் எதிராக உள்ளதையும், அது வெறுப்புப் பேச்சு என்பதும் தெரிகிறது.

சனாதனியான மனுதாரர், அத்தகைய வெறுப்புப் பேச்சால் பாதிக்கப்பட்டவர் மற்றும் சனாதன தர்மத்தை அந்த வெறுப்புப் பேச்சிலிருந்து பாதுகாத்துள்ளார். இதனால் அமைச்சர் பேச்சுக்கு பதிலளித்த மனுதாரர் மீது சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது. இப்பிரிவுகள் அமைச்சரின் பேச்சுக்குதான் பொருந்தும்.