நெடுந்தீவுக்கான படகுகள் சேவைகள் இன்றி, பயணிகள் பெரும் இடர்களை சந்தித்து வரும் நிலையில், வடதாரகையை இயக்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதி நெடுந்தீவு பிரதேச செயலரிடம் உறுதி அளித்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேச செயலர் என்.பிரபாகரன், கடற்படையின் வடபிராந்திய கட்டளை தளபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (20) கடற்படை தளத்தில் இடம்பெற்றது. அதன் போதே வட தாரகையை இயக்குவது தொடர்பில் உறுதி அளித்தார்.
குறித்த கலந்துரையாடலில் நெடுந்தீவு – குறிகாட்டுவான் கடற்போக்குவரத்தில் அண்மைக்காலமாக பிரதேச மக்கள், அலுவலர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து பிரதேச செயலர் தெளிவுபடுத்தினார்.
மேலும் அன்றாட சேவையில் ஈடுபட்டுவந்த வடதாரகை, குமுதினி மற்றும் சமுத்திரதேவா படகுகள் சமகாலப்பகுதியில் சேவையில் ஈடுபட முடியா நிலையில் மக்களின் இடர்பாடுகளை முடிவிற்குகொணரும் வகையில் வடதாரகையை இயக்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

