இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அனுமதி

13 0

இலங்கை காப்புறுதி நிறுவன சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. திங்கட்கிழமை (19) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.

காப்புறுதித் துறையின் அறிவு விருத்தி மற்றும் மேம்பாட்டை மையமாகக் கொண்ட நிறுவனமாக செயற்படுவதற்காக 1982ஆம் ஆண்டில் இலங்கை காப்புறுதி நிறுவனம் நிறுவப்பட்டது.
இந்நிறுவனம் காப்புறுதி தொடர்பான கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், பயிற்றுவித்தல் மற்றும் தொழில்வாண்மை பரீட்சைகளை நடத்தும் இலங்கையின் ஒரேயொரு தொழில்வாண்மை நிறுவனமாகும்.

2000ஆம் ஆண்டின் 43 இலக்க காப்புறுதி தொழிற்துறையை முறைமைப்படுத்தும் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற காப்புறுதி முகவர்களாக தகைமை பெறுவதற்காக இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சார்பில் இலங்கை காப்புறுதி நிறுவனத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளில் சித்தியடைதல் கட்டாயமானதாகும்.

இலங்கை காப்புறுதி நிறுவனம் தனது கருமங்களை முறையாக நிறைவேற்றுவதற்கு தேவையான அதிகாரத்தை வழங்குதல் மற்றும் நிதி ரீதியில் நிலைபேறான நிறுவனமாக இயங்குவதற்கான இயலுமை கிடைக்கும் வகையில் இலங்கை காப்புறுதி நிறுவனத்தை கூட்டிணைப்பதற்காக 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் நிதி விடயதான அமைச்சினால் இலங்கை காப்புறுதி நிறுவனத்தை கூட்டிணைப்பதற்கான அடிப்படைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டது. அந்த அடிப்படை சட்ட மூலத்திற்கு சமகால இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்நிலையில் மேற்குறித்த சட்ட மூலத்தின் அடிப்படையில் இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.