கண்டி மாவட்டத்தின் கம்பளை, சரசவிகம, தெல்தோட்டை மற்றும் தொலுவ போன்ற பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட சுழற்காற்று மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா தெரிவித்தார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் போதுமான நிதி உதவிகளை வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்தினார்.
அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளுக்கு மதிப்பீடுகள் இன்றி 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், கண்டி மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு அந்த நிதி இன்னும் சென்றடையவில்லை என அவர் குறிப்பிட்டார்.இதன் காரணமாக முதியவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகக் கஷ்டமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, தமது அன்றாடத் தேவைகளுக்காக சொத்துக்களை அடகு வைத்தும் அதிக வட்டிக்குக் கடன் பெற்றும் பாரிய கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட ஒட்டுமொத்தப் பாதிப்பு 4 மில்லியன் டாலர்கள் என உலக வங்கி மதிப்பிட்டுள்ள போதிலும், அனர்த்தத்தினால் ஏற்பட்ட நேரடி நஷ்டத்தை விடவும் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான செலவு மிக அதிகம் என பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
உதாரணமாக, மலையக புகையிரத பாதையை புனரமைக்க ஒரு வருடத்திற்கு மேலாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் சுற்றுலாத்துறைக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்படும் மறைமுகப் பொருளாதாரப் பாதிப்புகளை அரசாங்கம் சரியாகக் கணக்கிடவில்லை.
உண்மையில், இந்த அனர்த்தங்களினால் நாட்டுக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த நஷ்டம் 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6% முதல் 8% வரையான தொகையாகும். இந்த உண்மையான நஷ்டமானது உலக வங்கியின் மதிப்பீட்டை விட இருமடங்கு அதிகமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில், அரசாங்கம் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டமொன்றைக் கூட்டி, அதன் அடிப்படையில் சர்வதேச உதவி மாநாட்டை (Donor Conference) நடத்துவதற்குத் தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களுக்கும், இந்தியா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் நிதி நெருக்கடி மற்றும் அனர்த்த நிலைமைகளை முன்னரே எதிர்வுகூறியிருந்ததுடன், அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சரியான தரவுகளை முன்வைத்து மக்களின் நலனுக்காக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
வெறும் அரசியல் விவாதங்களுக்குள் முடங்கிக் கிடக்காமல், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க அரசாங்கம் இந்த சர்வதேச உதவி மாநாட்டைக் கூட்ட முன்வர வேண்டும் என்றார்.

