இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தத் தயார்

29 0

பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்குவது குறித்து கனேடிய அரசாங்கத்திடம் வலியுறுத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த கனேடிய ஆளும் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களுக்கு அவசியமான உதவிகள் உரிய காலப்பகுதியில் சென்றடைவதில் குறைபாடுகள் நிலவுவதாகக் கரிசனை வெளியிட்டார்.

அதுமாத்திரமன்றி அனர்த்தத்தினால் மிகமோசமான தாக்கங்களுக்கு முகங்கொடுத்திருக்கும் மலையக மக்கள் தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்திய அவர், அம்மக்களுக்கு காணி உரிமையை வழங்கி, பாதுகாப்பான வீடுகளில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார்.உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தமிழக அரசினால் கடந்த திங்கட்கிழமை (12) சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொண்ட கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன், கடந்த 14 – 17 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கடந்த நவம்பர் மாத இறுதியில் ‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் நாடு முகங்கொடுத்திருக்கும் பாதிப்புக்கள், கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள விதம், இலங்கைக்கு தேவையான மேலதிக உதவிகள் என்பன பற்றி ஆராயும் நோக்கில் நாட்டுக்கு வருகைதந்திருந்த ஜுவனிதா, இக்காலப்பகுதியில் கொழும்பில் கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனேடிய உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதில் பங்களிப்புச்செய்யும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்தினார்.

அதுமாத்திரமன்றி வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கும் மத்திய மலைநாட்டில் கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்ட அவர், அங்கு பிரதேச செயலக அதிகாரிகள், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டர் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்டோருடன் களநிலைவரம் குறித்துக் கலந்துரையாடினார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விஜயத்தின் நிறைவில் தான் அவதானித்த விடயங்கள் குறித்து கேசரியிடம் கருத்துரைத்த ஜுவனிதா, பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அவசியமான மேலதிக உதவிகள் குறித்து ஆராய்ந்திருப்பதாகவும், அவ்வுதவிகளை உரிய வழிமுறைகளின் ஊடாக வழங்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் வலியுறுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை கிழக்கில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்லமுடியாத போதிலும், வடக்கில் பேரனர்த்தத்தினால் பாரிய வாழ்வாதாரப்பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்ததாகக் குறிப்பிட்ட அவர், அம்மக்களுக்கு அவசியமான நிவாரண உதவிகள் சென்றடைவதிலும் குறைபாடுகள் நிலவுவதாகக் கரிசனை வெளியிட்டார்.

அதேபோன்று மலையக மக்கள் தொடர்பிலும் மிகுந்த கவலையை வெளிப்படுத்திய அவர், நீண்டகாலமாக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிவரும் அம்மக்களுக்கு காணி உரிமையை வழங்கி, அவர்களைப் பாதுகாப்பான வீடுகளில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது மிக அவசியம் என வலியுறுத்தினார்.

மேலும் எதிர்வருங்காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், அதனால் ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைத்துக்கொள்வதற்கான கொள்கைகள் மற்றும் வசதிகளை வகுப்பதற்கு ஏற்றவகையில் அனர்த்த அச்சுறுத்தல் மதிப்பாய்வு ஒன்றை அரசாங்கம் இப்போது முன்னெடுக்கவேண்டும் என்றும் ஜுவனிதா நாதன் பரிந்துரைத்தார்.