டித்வா பேரிடருக்குப் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானச் செயற்பாடுகளில் மலையகத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகின்றனர் என மக்கள் போராட்ட முன்னணி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
2026 ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் முறையாக கிடைக்கவில்லை எனவும், அரச இயந்திரத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக அவர்கள் மேலும் ஆபத்தான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:
பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் தகவல்கள் மற்றும் தரவுகள் முறையாக பதிவுசெய்யப்படவில்லை.
தோட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் நிவாரணப் பொருட்கள் சீரான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை வசதிகள், குறிப்பாக ஆண் – பெண் தேவைகள் உரிய முறையில் கவனிக்கப்படவில்லை.
அரசாங்கத்தின் நிவாரண திட்டங்கள், சுற்றுநிரூபங்கள் மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பான தகவல்கள் மக்களுக்கு அவர்களின் தாய் மொழியான தமிழில் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை.
மலையகத் தோட்டப் பகுதிகளில் கடுமையாக சேதமடைந்த பாதைகள் மற்றும் நிலப்பரப்புகளின் மீள் கட்டுமானம் தொடர்பில் தெளிவான வேலைத்திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
வீடுகள் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையை மதிப்பிடுவதிலும், அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரணங்களை நடைமுறைப்படுத்துவதிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
கட்டட ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்படாத நிலையில், பாதுகாப்பற்ற வீடுகளிலேயே மீண்டும் குடியேறுமாறு மக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு இன்மையால், வாழ்வாதாரம், வீட்டு வசதி, கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை இழக்கும் அபாயம் மலையகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
முன்மொழிவுகள் : இதனுடன், மக்கள் போராட்ட முன்னணி பல முக்கிய யோசனைகளையும் முன்வைத்துள்ளது. அதன்படி,
மலையகத்தின் அனைத்து குடியிருப்பு பகுதிகளும் முழுமையான விஞ்ஞான ரீதியான நில ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அறிக்கைகள் தமிழ் மொழியிலும் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் வெளியிடப்பட வேண்டும்.
இயற்கைப் பேரிடரால் முழுமையாக பாதிக்கப்பட்டு மீண்டும் குடியேற இயலாத தோட்டப் பகுதிகளில் வாழ்வோருக்கு, அரசாங்கம் அறிவித்துள்ள ரூ.50 இலட்சம் பெறுமதியான வீடு அல்லது காணி பெறுவதற்கான ரூ.50 இலட்சம் நிதி உள்ளிட்ட அனைத்து நிவாரணங்களும் எந்தவொரு பாகுபாடுமின்றி வழங்கப்பட வேண்டும்.
ஆபத்தான லயன் குடியிருப்புகள் மற்றும் தற்காலிக வீடுகளில் வாழ்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, குடும்பத்துக்கு 20 பேர்ச் காணியுடன் நிலையான குடியிருப்பு வழங்கப்பட வேண்டும்.
தேவையான நிலப்பரப்புகளை அரசாங்கம் சட்டபூர்வமாக கையகப்படுத்தி, உறுதி பத்திரங்களுடன் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், 1972 ஆம் ஆண்டு காணி சீர்திருத்தச் சட்டத்தின் 3B பிரிவின் அடிப்படையில், தனியாரிடமிருந்து கையகப்படுத்தப்படும் காணிகளில் ஏக்கரில் எட்டில் ஒரு பங்கு (20 பேர்ச்) மலையகத் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2018 ஆம் ஆண்டு மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் படி, தோட்டப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டேர் பயிரிடப்படாத நிலம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, அனர்த்தங்களை கையாள விசேடமாக மலையக கிராமிய அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் ஒருங்கிணைப்பு சபை ஒன்றை நிறுவ வேண்டும் என்றும், புறக்கணிப்பு தொடர்பில் மக்கள் முறையிடக் கூடிய தனியான குறைகேள் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கைகள் மீது ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி, மலையகத் தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

