இந்துமதம் பற்றிய விடயங்கள் புறக்கணிக்கப்பட்டு பெளத்த மேலாதிக்கம் வடகிழக்கில் திணிக்கப்படுகிறது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தனது ஊடக அறிக்கையில் இன்று (13) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் தமிழ் மக்கள் பூர்வீக குடிகளாவர். விஜயன் இலங்கைக்கு வரும்போது இங்கு தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களாக பல விடயங்களை குறிப்பிடலாம்.
திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேஸ்வரம், கன்னியா வெந்நீரூற்று ஆகியன விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் இன்று இந்துமதம் பற்றிய விடயங்கள் புறக்கணிக்கப்பட்டு பெளத்த மேலாதிக்கம் வடகிழக்கில் திணிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் இந்துசமய கலாசார அமைச்சு உருவாக்கப்பட்டு அதற்கான அமைச்சர் கூட நியமிக்கப்பட்டு இந்து மத சமய விடயங்கள் தனித்துவமாக பேணப்பட்டன. ஆனால், இன்று பெளத்த கலாசார அமைச்சுக்குள் இந்து சமய விடயங்கள் கவனிக்கப்படுகின்றன.
இந்த விடயங்கள் மாற்றப்பட்டு இந்து கலாசார பிரிவுக்கு தனியான அமைச்சு உருவாக்கப்பட்டு அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும்.
இன்றைய சூழலில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்திய தமிழ் மக்களின் காணிகளில் ஒரு சிறு துண்டேனும் திருப்பிக் கொடுக்க முடியாது என பெளத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவ்விடயங்களில் அரசு கவனமெடுத்து தீர்வு வழங்கவேண்டும் என சின்னமோகன் தெரிவித்துள்ளார்.

