இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தமிழக அரசினால் திங்கட்கிழமை (12) சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அயலகத்தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்கொண்ட கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ஜுவனிதா நாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழரின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் உலக அயலகத் தமிழர் தினம் 2026 க்கு என்னை அழைத்தமைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழராக கனேடிய மண்ணின் மக்கள் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியையும் பெருமிதமும் அடைகிறேன்.
தமிழர்கள் உலகம் முழுவதும் பெரும் ஆளுமையாக வளர்ந்து வருகிறார்கள். அயலக தேசங்களில் தமிழ் மரபு, பண்பாடு மற்றும் மொழியைப் பாதுகாத்தும், வளர்த்தும் வருவதில் புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு. அதுமாத்திரமன்றி வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளிலும் தமிழர்கள் உலகம் முழுவதும் பெருமளவுக்கு முன்னேறி வருகின்றனர். இவ்வாறு பல வழிகளிலும், பல்வேறு துறைகளிலும் புலம்பெயர் தேசங்களில் தமிழர் மரபையும், திறனையும், ஆளுமையையும் கட்டிக்காத்து வளர்ந்துவரும் தமிழர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைந்து நடாத்தி வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கு எனது பாராட்டுக்களைக் கூறிக்கொள்கிறேன்.
கனடா மற்றும் இந்திய 75 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான தூதரக உறவுகளைப் பேணிவருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் கனடா – இந்தியா உறவு வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக மேலும் வலுவடைந்து வருகிறது. இவ்விடயத்தில் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பொருளாதார உறவுகளில் தமிழ்நாடும் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ்ச்சமூகமும் முக்கிய பங்களிப்பை வழங்கமுடியும் என நான் நம்புகிறேன். கனடாவில் இலங்கையிலிருந்து குடியேறிய கணிசமான எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஈழத்தமிழர்களாக இருந்தபோதும் தமிழர்களாக இவர்கள் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுடன் பிரிக்கமுடியாத உறவை மொழி சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் பகிர்ந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் 10 கோடி தமிழர்கள் வாழும் நிலையில், கனடா மிகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச்சமூகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் கனேடிய தமிழர்களும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து உலகத் தமிழ்ச்சமூகத்தின் பண்பாடு, மொழி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை வடிவமைப்பதில் அர்த்தமுள்ள பங்கை வகிக்க முடியும் என நான் நம்புகிறேன். அதேவேளை இதனூடாக நாம் வாழும் நாடுகளின் தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கும் இதன்மூலம் பங்களிப்புச் செய்யமுடியும். அதேபோன்று ஈழத்தமிழ் அகதிகளுக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் மிகமுக்கியமானவையாகும். ஈழத்தமிழராக கனேடிய மண்ணுக்குப் புலம்பெயர்ந்து, இன்று கனடாவின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள நான், தமிழ்நாடு அரசு ஈழத்தமிழ் அகதிகளுக்குச் செய்த ற்றும் செய்கின்ற சகல உதவிகளுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் தமிழ்நாடு பொருளாதார செயற்பாடுகளில் முன்மாதிரியாகவும், சிறப்பாகவும் வளர்ந்து வருகிறது. அதனை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு எனது பாராட்டை வெளிப்படுத்துகிறேன். அதேவேளை மறுபுறம் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பமுடியும் என்பதுடன் அதனூடாக தமிழ்நாடும் நன்மையடைய முடியும். இதற்கான நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு கனேடிய தமிழர்கள் உட்பட புலம்பெயர் தமிழ்ச்சமூகங்கள் அனைத்தும் இணைந்து செயற்பட முன்வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றார்.

