எக்ஸ்பிரஸ் பேர்ள் (X – Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் கிடைத்த நஷ்டஈட்டுத் தொகையை மீனவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது மற்றும் கரையோர அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
அதன்படி, இதுவரை பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகை, மீனவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட தொகை, கரையோரப் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் தற்போது மீதமுள்ள தொகை குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் குழு அறிவுறுத்தியது.
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்தக் கப்பலினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் முன்னேற்றம் தொடர்பிலும் குழுவில் ஆஜராகியிருந்தவர்களிடம் வினவப்பட்டது.
அத்துடன், இலங்கையில் வழக்குத் தாக்கல்செய்தமைக்கு மேலதிகமாக சிங்கப்பூரில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நடைமுறை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் குறித்து அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டமொன்றை எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யவேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா, ரொஷான் அக்மீமன, எம்.ஏ.சி.எஸ். சதுர கங்கானி, சுசந்த குமார நவரத்ன, சித்ரால் பெர்னாந்து, பாக்ய சிறி ஹேரத் மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், சுற்றாடல் அமைச்சு, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சுற்றாடல் சுற்றாடல் அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அதிகாரசபை போன்றவற்றின் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

