அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை மிகவும் வினைத்திறன் மிக்கதாக்குவதற்கு தற்பொழுது காணப்படும் அளவுகோல்களைத் திருத்துமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவினால், நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தற்பொழுது அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவுசெய்யப் பயன்படும் 22 அளவுகோல்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் தோன்றியிருப்பதால், எதிர்காலத்தில் அஸ்வெசும பயனாளிகளின் தெரிவைப் புதிய அளவுகோல்களுக்கு அமைய மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
அன்றைய தினம் 2025.12.15ஆம் திகதி 2467/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2002ஆம் ஆண்டு 24ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் 09வது பிரிவின் கீழ் அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை நீடிப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அஸ்வெசும திட்டத்தின் ஊடாக நன்மைகளைப் பெற்ற நிலைமாறும் நிலையில் உள்ளவர்கள், பாதிப்புக்கு உட்படக்கூடியவர்கள், வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் போன்ற பிரிவுகளில் நிலைமாறும் நிலையில் உள்ளவர்களுக்கான சலுகைகள் 2025 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளன. இதற்கமைய அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தத்தின் ஊடாக பாதிப்புக்கு உட்படக்கூடியவர்கள், வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் ஆகிய பிரிவுகளுக்கு மாத்திரம் இத்திட்டம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருந்தபோதும் எதிர்பாராத பேரிடர் சூழ்நிலையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூகப் பொருளாதார பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு 2025.12.31ஆம் திகதியுடன் முடிவடையவிருக்கும் பாதிப்புக்கு உட்படக்கூடிய பிரிவுக்கான கொடுப்பனவு 2026ஆம் ஆண்டு யூன் மாதம் வரையில் நீடிப்பதற்கும் முன்மொழியப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இயலாமையுடைய நபர்கள், சிறுநீரக நோய்க்கான உதவிகளைப் பெறுபவர்கள் மற்றும் முதியோருக்கான உதவி பெறுகின்றவர்களுக்கான சலுகைகள் மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து அத்திணைக்களத்தின் அதிகாரிகளிடம் குழு கேட்டறிந்தது. இருபது இலட்சம் குடும்பங்களைப் படிப்படியாக வலுவூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கான சம்பளங்களை வழங்குதல் உள்ளிட்ட நிர்வாகச் செயற்பாடுகளுக்கு வருடாந்தம் செலவாகும் மொத்தத் தொகை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது.
அண்ணளவாக வருடாந்தம் 22 பில்லியன் ரூபா செலவு செய்யப்படுவதாகவும், 2026ஆம் ஆண்டில் சம்பளம் மற்றும் வலுவூட்டல் நடவடிக்கைகளுக்காக 27.38 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வலுவூட்டல் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் பெருந்தொகையான நிதி சம்பளம் உள்ளிட்ட செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூக வலுவூட்டல் திட்டங்கள் குறித்த ஏதேனும் பின்தொடர்தல்கள் அல்லது மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்றும் குழுவின் தலைவர் வினவினார். எனினும், அவ்வாறான மதிப்பாய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வலுவூட்டல் திட்டங்கள் உள்ளிட்ட சகல நலன்புரித் திட்டங்களையும் சுயாதீன மதிப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
இக்குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர்களான நிஷாந்த ஜயவீர, கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நிமல் பளிஹேன, சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

