“தேசிய ரீதியில் தரப்படுத்தப்பட்ட ஒரு சட்டகத்தின் வழிகாட்டலில், இலங்கையிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தித் திட்டத்தை (Early Childhood Development programme) நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.”
முன்பிள்ளைப்பருவ சிறுவர்களிடையே சமூக மற்றும் நடத்தை ரீதியான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறுவர் சுகாதார மேம்பாட்டுத் தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, புதன்கிழமை (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இத்திட்டம் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ், தேசிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தலைமையின் கீழ், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட 12 அமைச்சுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இது முன்னெடுக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில், ஜனவரி 10ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செயற்பாடுசார் கற்றல் அணுகுமுறை (Activity-based learning) மற்றும் கற்றலுக்கு அத்தியாவசியமான கருவிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் சிறுவர்களிடையே ஒத்துணர்வு (Empathy) மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், ஒழுக்க மேம்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்துதல் போன்ற பண்புகளை வளர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷண, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (தூய்மையான இலங்கை) பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஷ்வர, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பாடவிதான ஒருங்கிணைப்பு மற்றும் ஆரம்பக் கல்வி அபிவிருத்தி) திருமதி உதார திக்கும்புர மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பத்துவந்துடாவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

