டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள்: சிஐடியினர் தீவிர விசாரணை

19 0

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுஷிடம் இருந்த துப்பாக்கியின் இலக்கங்களை சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது துப்பாக்கி எவ்வாறு தொலைந்துபோனது என்பதினை தெளிவுபடுத்த தவறிய காரணத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.